திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன பக்தர்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக குறைக்க ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன பக்தர்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
திருமலை,
கொரோனா தொற்று 2-வது அலை பரவி வருவதால், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் இலவச தரிசன பக்தர்களின் எண்ணிக்கையை 22 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது:-
இந்தியாவில் 2-வது அலையாக கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா பரவல் வழிகாட்டுதல் விதிமுறைகளை கடைப்பிடித்து ஆரோக்கியமான பக்தர்கள் மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வர வேண்டும். திருமலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பக்தர்கள் தங்களின் கைகளில் சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.
திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், கோவில், தறிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடம், தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாணக்கட்டாக்கள் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடம் இடங்களில் பக்தர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்.
மேற்கண்ட பகுதியில் 2 மணிநேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் கைகளில் சானிடைசர் பயன்படுத்தப்படுகிறது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.
தினமும் ஏழுமலையான் கோவிலில் 22 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா தொற்று 2-வது அலை பரவல் எதிரொலியால் 22 ஆயிரம் பக்தர்களில் இருந்து 15 ஆயிரம் பக்தர்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இருந்து தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரூ.300 தரிசன டிக்கெட் எண்ணிக்கை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்று பரவலால் குறைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். தறிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் சாப்பிட வரும் பக்தர்கள், விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்ய வரும் பக்தர்களின் வெப்பநிலையை அளவிட தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு அறையில் 2 பக்தர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு அலிபிரி சோதனைச்சாவடியில் இருந்து மதியம் 1 மணிக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்கள் தினமும் காலை 9 மணிக்கு மேல் அனுமதி வழங்கப்படும். இந்தப் பக்தர்கள் 30 நிமிடத்துக்கு முன்னதாகவே வைகுண்டம் கியூ காம்ப்ளக்சுக்குள் வந்து விட வேண்டும்.
வாகனங்களில் வரும் பக்தர்கள், வாகன டிரைவர்கள் ஆகியோருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை கண்டறியப்படும். உடல் வெப்பம் கூடுதலாக இருந்தாலோ, சளி, தும்பல், காய்ச்சல் தொல்லை இருந்தாலோ அந்தப் பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதியில்லை. கொரோனா பரவல் தடுப்பு பற்றி தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வானொலி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.
திருமலையில் பக்தர்கள் செய்ய வேண்டிய செயல்கள், செய்ய தகாத செயல்கள் பற்றி அகண்ட ஒளித்திரையில் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வழிகாட்டுதல் நடைமுறையை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story