ரமேஷ் ஜார்கிகோளி 2 முறை கற்பழித்த பின்பும் பெற்றோரிடம் தெரிவிக்காதது ஏன்; இளம்பெண்ணிடம், போலீசார் சரமாரி கேள்வி
ரமேஷ் ஜார்கிகோளியால் 2 முறை கற்பழிக்கப்பட்ட பின்பும் பெற்றோரிடம் தெரிவிக்காதது ஏன்? என்றும், தலைமறைவாக இருந்த காலத்தில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? என்றும் இளம்பெண்ணிடம் போலீசார் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
பெங்களூரு: ரமேஷ் ஜார்கிகோளியால் 2 முறை கற்பழிக்கப்பட்ட பின்பும் பெற்றோரிடம் தெரிவிக்காதது ஏன்? என்றும், தலைமறைவாக இருந்த காலத்தில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? என்றும் இளம்பெண்ணிடம் போலீசார் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
2-வது நாளாக விசாரணை
கர்நாடக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மீதான ஆபாச வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் நேற்று முன்தினம் நீதிபதி முன்பு ஆஜராகி இளம்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார். நேற்று இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் மாலை 4 மணியளவில் பவுரிங் ஆஸ்பத்திரியில் இருந்து இளம்பெண் மடிவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு இளம்பெண் ஓய்வெடுக்க போலீசார் அனுமதித்தனர். அதன்படி, அரை மணிநேரம் இளம்பெண் ஓய்வெடுத்தார். அதன்பிறகு இளம்பெண்ணிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். விசாரணை அதிகாரியான கவிதா தலைமையில் விசாரணை நடைபெற்றது.
84 கேள்விகள்
நேற்று ஆபாச வீடியோ விவகாரம் குறித்து போலீசாருக்கு தேவைப்பட்ட தகவல்கள் குறித்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. ரமேஷ் ஜார்கிகோளியுடன் அறிமுகம் ஆனதில் இருந்து, ஆபாச வீடியோ வெளியானது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. ரமேஷ் ஜார்கிகோளி 2 முறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய பின்பும் பெற்றோருக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை?.
நரேஷ்கவுடா மற்றும் ஸ்ரவன் உதவியை நாடியது ஏன்? என்பது குறித்து விசாரிக்கப்பட்டது. அதற்கு இளம்பெண், பெற்றோரிடம் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு தயங்கியதாகவும், ரமேஷ் ஜார்கிகோளி மந்திரி பொறுப்பில் இருந்ததால், அவருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க நரேஷ்கவுடாவின் உதவியை நாடியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் ஸ்ரவனுடன் ஏற்பட்ட பழக்கம் பற்றி இளம்பெண் சரியான பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது.
ரூ.9 லட்சம் சிக்கியது குறித்து...
அதே நேரத்தில் இளம்பெண்ணின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.9 லட்சம் குறித்து போலீசார் கேள்வி எழுப்பினர். அந்த பணம், ரமேஷ் ஜார்கிகோளியிடம் இருந்து வாங்கப்பட்டதா? எனவும் கேட்டனர். ஆனால் தனக்கு எப்படி அந்த பணம் கிடைத்தது என்பது பற்றி இளம்பெண் சரியான பதில் சொல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
வெளிமாநிலங்களில் 28 நாட்கள் தலைமறைவாக இருந்த சந்தர்ப்பத்தில் யாரெல்லாம் உதவி செய்தார்கள்?, அடைக்கலம் கொடுத்தார்கள்?, என்ன காரணத்திற்காக உங்களுக்கு அவர்கள் உதவி செய்தார்கள் என்பது குறித்தும் இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர்.
இன்றும் ஆஜராக உத்தரவு
இளம்பெண்ணிடம் 2-வது நாளாக முடிந்ததை தொடர்ந்து, அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். இன்றும் (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகும்படி இளம்பெண்ணுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மல்லேசுவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இளம்பெண்ணை, ரமேஷ் ஜார்கிகோளி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு இன்று இளம்பெண்ணை அழைத்து சென்று போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்த உள்ளனர்.
அதே நேரத்தில் ஆபாச வீடியோவில் உள்ள குரல் மற்றும் ரமேஷ் ஜார்கிகோளியுடனான ஆடியோவில் பேசும் குரல் இளம்பெண்ணுக்கு உரியதுதானா? என்பதை கண்டறிய, அவரது குரல் பதிவை தடயவியல் ஆய்வுக்காக சிறப்பு விசாரணை குழு போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
6 மாநிலங்களில் வலம்...
இதற்கிடையே கடந்த 2-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரை இளம்பெண் தலைமறவைாக இருந்து வந்திருந்தார். அந்த நாட்களில் கர்நாடகம் தவிர 6 மாநிலங்களுக்கு இளம்பெண் சுற்றி திரிந்தது தெரியவந்துள்ளது. முதலில் பெங்களூருவில் இருந்து கோவாவுக்கு சென்றிருந்தார். அதன்பிறகு, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், சென்னை, டெல்லி, மத்திய பிரதேச மாநிலம் போபால், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்று வந்ததும் தெரியவந்துள்ளது. 6 மாநிலங்களுக்கு சென்ற இளம்பெண், அங்குள்ள 5 நட்சத்திர ஓட்டல்களில் தான் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் கடைசியாக டெல்லியில் தங்கி இருந்ததும், டெல்லியில் இருந்து நேரடியாக பெங்களூருக்கு வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் ரமேஷ் ஜார்கிகோளி தனக்கு கொடுத்த தொல்லைகள், பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியது குறித்து நீதிபதியிடம் இளம்பெண் வாக்குமூலம் தெரிவித்திருந்தார். இளம்பெண் கூறிய வாக்குமூலம் 20 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story