45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி


45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று முதல்  கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 1 April 2021 4:14 AM IST (Updated: 1 April 2021 4:14 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான ஏற்பாடுகள், தடுப்பூசிகள் இருப்பு, கள பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் காணொலி காட்சி வழியாக உயர் மட்ட கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள், தேசிய சுகாதார திட்ட இயக்குனர்கள், மாநில தடுப்பூசி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரியும், கொரோனா தடுப்பூசி திட்டத்தின் உயர் அதிகாரம் கொண்ட குழுவின் தலைவருமான டாக்டர் ஆர்.எஸ்.சர்மா பேசினார்.

அப்போது அவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்காக தடுப்பூசிகளை பாதுகாத்து வைப்பதில் அர்த்தம் இல்லை. தடுப்பூசி தேவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“மாநிலங்களுடனான தடுப்பூசி வினியோகத்தில் தட்டுப்பாடு இல்லை. தடுப்பூசிகளை சேமித்து வைப்பதில் பிரச்சினை ஏதும் இல்லை. தடுப்பூசி தொடர்பான தளவாடங்களுக்கும் பிரச்சினை இல்லை. மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசி வினியோகம் தொடர்ந்து செய்யப்படும்” எனவும் அவர் மத்திய அரசின் சார்பில் உறுதிபட தெரிவித்தார்.சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களை பொறுத்தமட்டில் தகுதி வாய்ந்த பயனாளிகளை மட்டுமே பதிவு செய்து, தடுப்பூசி போடுவதை மாநிலங்கள் உறுதிசெய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.

தடுப்பூசி திட்டத்தில் தனியார் தடுப்பூசி மையங்களின் ஈடுபாட்டை பொறுத்தமட்டில், அந்த மையங்களின் தடுப்பூசி பயன்பாடு எப்படி உள்ளது என்பது பற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடத்த வேண்டும், கூடுதல் தடுப்பூசி மையங்கள் அமைப்பது தொடர்பாக பகுப்பாய்வு செய்ய வேண்டும், தடுப்பூசி வினியோகம் தொடர்பான தனியார் தடுப்பூசி மையங்களின் அச்சத்தை போக்க வேண்டும், ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை கூற வேண்டும் என்றும் மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டன.

தடுப்பூசி இருப்பினை பொறுத்தமட்டில், அதிகளவு இருப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அதே நேரம் குளிர் சங்கிலி முனையங்களில் போதிய அளவு இருப்பு இருக்க வேண்டும், பயன்பாடு அடிப்படையில் வினியோகங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

Next Story