மேற்குவங்காள மாநிலம் 2 ம் கட்ட வாக்குப்பதிவு: வாக்குசாவடியில் இருந்து கவர்னரிடம் பேசிய மம்தா பானர்ஜி


Image courtesy : indianexpress
x
Image courtesy : indianexpress
தினத்தந்தி 1 April 2021 5:07 PM IST (Updated: 1 April 2021 5:07 PM IST)
t-max-icont-min-icon

மேற்குவங்காள மாநிலம் 2 ம் கட்ட வாக்குப்பதிவு வாக்குசாவடியில் இருந்து கவர்னரிடம் மம்தா பானர்ஜி பேசி புகார் கூறினார்.


கொல்கத்தா

மேற்குவங்காளத்திற்கு 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 27ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 

முதல்வர் மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியும் பலப் பரீட்சை நடத்தும் நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பதற்றம் நிறைந்ததாக நந்திகிராம் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடியும்வரை நந்திகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நந்திகிராம் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது முதல், மம்தா பானர்ஜி வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளைச் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே ஆய்வு செய்து வருகிறார்.

அப்போது, போயல் பகுதிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி வந்தபோது, அங்கிருந்த பா.ஜ.க.வினர் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும், பா.ஜ.க. தொண்டர்களும் திடீரென கைகலப்பில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் வன்முறை ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த போலீசார் தலையிட்டு இரு தரப்பினர் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர். இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கவர்னர் ஜகதீப் தங்கருடன் அங்கிருந்தபடியே  தொலைபேசியில்  பேசினார்   அவர்கள் ( பா.ஜ.கவினர்) உள்ளூர் மக்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. காலையிலிருந்து நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் ... இப்போது நான் உங்களிடம் முறையிடுகிறேன், தயவுசெய்து பாருங்கள் ... என கூறினார்.

இதையடுத்து துணைத் தேர்தல் அதிகாரி சுதீப் ஜெயின் மாவட்ட நிர்வாகத்துக்குப் பிறப்பித்த உத்தரவில், "போயல் பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். கேஷ்பூர் பகுதியில் இன்று காலை நடந்த வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பான விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "இன்று காலை முதல் 63 புகார்களைத் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துவிட்டோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நீதிமன்றத்தை நாடப் போகிறோம். அமித் ஷாவின் உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் நடக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து குண்டர்கள் வந்து அராஜகம் செய்கிறார்கள், வாக்காளர்களை மிரட்டுகிறார்கள். போயல் பகுதியில் உள்ள 7-ம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்" என கூறினார்.

மாலை 4 மணியளவில், மேற்கு வங்காளத்தில்  71.07 சதவீத  வாக்குகள் பதிவாகி உள்ளது. அசாமில்  63.04 சதவீத  வாக்குகள் பதிவாகி உள்ளது.



Next Story