எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதிய விவகாரம்; தேர்தல் தோல்வியை உணர்ந்து மம்தா விரக்தியில் இருக்கிறார்; பா.ஜனதா விமர்சனம்
தேர்தலில் தோற்கப்போவதை அறிந்து விரக்தியில் இருக்கும் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக பா.ஜனதா கூறியுள்ளது.
மம்தா அழைப்பு
மேற்கு வங்காள சட்டசபைக்கு 2-வது கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. அதற்கு முன்பாக நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி ஒரு கடிதம் எழுதி இருந்தார்.அதில், ஜனநாயகம் மீதும், அரசியல் சட்டம் மீதும் பா.ஜனதா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார். எனவே, பா.ஜனதாவுக்கு எதிராக நம்பகமான மாற்று சக்தியை முன்னிறுத்த வேண்டும், அதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு, உறுதியான போரை நடத்துவோம் என்று எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
விரக்திஇந்தநிலையில், இந்த கடிதம் குறித்து பா.ஜனதா பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
மம்தா பானர்ஜியின் கடிதம் அவரது விரக்தியை காட்டுகிறது. நந்திகிராம் தொகுதியில், தான் தோற்கப்போவது மட்டுமின்றி, தனது ஆட்சியும் பறிபோகப்போகிறது என்பதை அவர் உணர்ந்து கொண்டு விட்டார்.அதனால்தான், தன்னை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியையும் தன்னுடன் ஒன்று சேருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது, அவர் தப்பிப்பிழைப்பதற்கான யுக்தி ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மெகபூபா ஆதரவுஇதற்கிடையே, மம்தாவின் கடிதத்துக்கு மக்கள் ஜனநாய கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஜனநாயகத்தையும், அதன் மாண்புகளையும் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்ற தங்களின் (மம்தா பானர்ஜி) கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.கூட்டாட்சி நடைமுறையை மத்திய அரசு குழிதோண்டி புதைப்பது பற்றிய தங்களது கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். எனவே, இதற்கு எதிராக கூட்டுப்போர் தொடுப்பதுதான் இப்போதைய தேவை ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.