சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளராக அரவிந்த் சாவந்த் நியமனம்; சஞ்சய் ராவத் அதிகாரம் பறிப்பு
சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளராக அரவிந்த் சாவந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சஞ்சய் ராவத்தின் அதிகாரம் பறிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்தி தொடர்பாளர்
சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளராக சஞ்சய் ராவத் எம்.பி. இருந்து வருகிறார். இந்தநிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று கட்சியின் புதிய செய்தி தொடர்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் அரவிந்த் சாவந்த் எம்.பி. கட்சியின் புதிய தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதேவேளையில் ஏற்கனவே இந்த பதவியை வகித்துவந்த சஞ்சய் ராவத்தும் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்.
இதேபோல மந்திரிகள் குலாப்ராவ் பாட்டீல், தைர்யசீல் மானே ஆகியோரும் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்ட அரவிந்த் சாவந்த் 2019-ம் ஆண்டு வரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரி சபையில் சிவசேனா சார்பில் அங்கம் வகித்தவர். கூட்டணி முறிந்ததை அடுத்து அவர் தனது மந்திரி பதவியை இழக்க நேரிட்டது.
கூட்டணியில் சலசலப்புசிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளராக உள்ள சஞ்சய் ராவத் பேச்சுகள் கூட்டணி கட்சிகளுக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கட்சியில் அவரது அதிகாரம் பறிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக சமீபத்தில் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கை, சஞ்சய் ராவத் ‘தற்செயலான உள்துறை மந்திரி’ என கூறியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.அதேபோல ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறியதற்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
குறிப்பாக இதுகுறித்து காங்கிரஸ் மந்திரி பாலசாகேப் தோரட் கூறுகையில், “சஞ்சய் ராவத் எந்த கருத்தையும் கூறுவதற்கு முன்பு கவனமாக இருக்கவேண்டும்” என்றார்.
மேலும் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே சஞ்சய் ராவத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் செய்தி தொடர்பாளரா என கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமை வகிப்பது குறிப்பிடத்தக்கது.