முதல்மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்க பா.ஜ.க. மேலிடம் திட்டம்
ஆபாச வீடியோ விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ள பா.ஜனதா மேலிடம், முதல்-மந்திரி எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்யவும், இதற்காக முதற்கட்டமாக 3 மந்திரிகளை ராஜினாமா செய்யவைத்து நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு: ஆபாச வீடியோ விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ள பா.ஜனதா மேலிடம், முதல்-மந்திரி எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்யவும், இதற்காக முதற்கட்டமாக 3 மந்திரிகளை ராஜினாமா செய்யவைத்து நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
எடியூரப்பாவின் சி.டி.
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக 14 மாதங்கள் நீடித்தார். அதன் பிறகு அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தனர்.
இதனால் கூட்டணி அரசு கவிழ்ந்தது. எடியூரப்பா கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., எடியூரப்பாவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். எடியூரப்பா பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறி வருகிறார். எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக அவர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டி வருகிறார். எடியூரப்பாவின் சி.டி.யும் உள்ளதாக அவர் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
நடவடிக்கை எடுக்கவில்லை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த பசனகவுடா பட்டீல் யத்னால், முதல்-மந்திரி எடியூரப்பா விரைவில் நீக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். தனக்கு எதிராக பேசி வரும் பசனகவுடா பட்டீல் யத்னால் மீது நடவடிக்கை எடுக்குமாறு பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் எடியூரப்பா புகார் அளித்தார்.
ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச சி.டி. விவகாரம் பகிரங்கமாகி பா.ஜனதாவுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது அக்கட்சிக்கு களங்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பா.ஜனதா மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது.
3 மந்திரிகள் ராஜினாமா திட்டம்
இந்த நிலையில் தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, அசாம், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டால், எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்ய பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு முன்னோட்டமாக நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறார் என்று எடியூரப்பாவுக்கு எதிராக கவர்னரிடம் கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா புகார் அளித்துள்ளார். அடுத்த சில நாட்களில் மந்திரி பதவியை ஈசுவரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை தொடர்ந்து மேலும் 2 மூத்த மந்திரிகளும் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜனதா மேலிடம்
இவ்வாறு எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்து 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு வெளியே வந்ததும், அவரை ராஜினாமா செய்ய வைக்க பா.ஜனதா மேலிடம் திட்டம் வகுத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் எடியூரப்பாவை அவ்வளவு எளிதாக முதல்-மந்திரி பதவியில் இருந்து கீழே இறக்க முடியாது. அவருக்கு 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.
பா.ஜனதாவில் பிரதமர் மோடி, அமித்ஷா பலம் வாய்ந்த தலைவர்களாக வலம் வந்தாலும், கர்நாடகத்தை பொறுத்தவரையில் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக எடியூரப்பா உள்ளார். அதனால் அவரது விஷயத்தில் பா.ஜனதா மேலிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகே இ்ந்த விவகாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story