கர்நாடகத்தில் வாடகை கார்களின் கட்டணம் திடீர் உயர்வு


கர்நாடகத்தில் வாடகை கார்களின் கட்டணம் திடீர் உயர்வு
x
தினத்தந்தி 2 April 2021 2:51 AM IST (Updated: 2 April 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் வாடகை கார்களை 4 வகையாக பிரித்து கட்டணத்தை திடீரென உயர்த்தி மாநில அரசு அறிவித்து உள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் வாடகை கார்களை 4 வகையாக பிரித்து கட்டணத்தை திடீரென உயர்த்தி மாநில அரசு அறிவித்து உள்ளது.

வாடகை கார்கள்

கர்நாடகத்தில் வாடகை கார்களுக்கான அரசு நிர்ணயித்த கட்டணம் குறைவாக உள்ளதால், போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று கூறி பெங்களூருவில் ஒரு டாக்சி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் கர்நாடக அரசின் போக்குவரத்து துறை, வாடகை கார்களின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வாடகை கார்கள் 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார்கள் டி பிரிவாகவும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்கள் சி பிரிவாகவும், ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான கார்கள் பி பிரிவாகவும், ரூ.16 லட்சத்திற்கு மேற்பட்ட கார்கள் ஏ பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. டி பிரிவு கார்களுக்கான கட்டணம் 4 கிலோ மீட்டர் வரை ரூ.75 ஆகவும், அதன் பிறகு ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகபட்சமாக ரூ.36 ஆகவும், சி பிரிவு கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.100 ஆகவும், அதன் பிறகு ஒரு கிலோ மீட்டருக்கு அதிகபட்சமாக ரூ.42 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காத்திருப்பு கட்டணம்

பி பிரிவு கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.120 ஆகவும், அதன் பிறகு ஒரு கிலோ மீட்டருக்கு அதிகபட்சமாக ரூ.48 ஆகவும், ஏ பிரிவு கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.150 ஆகவும், அதன் பிறகு ஒரு கிலோ மீட்டருக்கு அதிகபட்சமாக ரூ.54 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நேரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், முதல் 20 நிமிடங்களுக்கு காத்திருப்பு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், அதன் பிறகு 15 நிமிடங்களுக்கு ரூ.10 என்ற வீதத்தில் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

எச்சரிக்கை

அரசு நிர்ணயித்துள்ள இந்த கட்டணத்தை மீறி கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அத்தகைய வாடகை கார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story