எடியூரப்பாவுக்கு எதிராக மந்திரி ஈசுவரப்பாவின் புகாருக்கு சக மந்திரிகள் கடும் எதிர்ப்பு


எடியூரப்பாவுக்கு எதிராக மந்திரி ஈசுவரப்பாவின் புகாருக்கு சக மந்திரிகள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 2 April 2021 3:32 AM IST (Updated: 2 April 2021 3:33 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக மந்திரி ஈசுவரப்பா கூறிய புகாருக்கு சக மந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எந்த துறையிலும் தலையிட முதல்-மந்திரிக்கு அதிகாரம் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

பெங்களூரு: முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக மந்திரி ஈசுவரப்பா கூறிய புகாருக்கு சக மந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எந்த துறையிலும் தலையிட முதல்-மந்திரிக்கு அதிகாரம் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். 

கடும் எதிர்ப்பு

கர்நாடக கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக பணியாற்றி வருபவர் ஈசுவரப்பா. அவர் நேற்று முன்தினம் கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக ஒரு புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது துறை நடவடிக்கைகளில் எடியூரப்பா தலையிடுவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். 

மேலும் பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கும் ஈசுவரப்பா புகார் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு பா.ஜனதா தலைவர்கள், சக மந்திரிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மந்திரிகளில் ஈசுவரப்பா மூத்தவர். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை கட்சி அல்லது மந்திரிசபை கூட்டத்தில் எடுத்துக்கூறி தீர்த்துக்கொள்ள வேண்டும். பிரச்சினைகளை கூற பல்வேறு தளங்களில் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இருக்கையில் முதல்-மந்திரிக்கு எதிராக கவர்னரிடம் ஈசுவரப்பா புகார் கூறி இருப்பது சரியான நடவடிக்கை அல்ல. 

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்-மந்திரியுடன் ஆலோசிப்பதாக ஈசுவரப்பா கூறியுள்ளார். அவ்வாறு ஆலோசனை நடத்தி தனது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். முதல்-மந்திரி எல்லா துறையிலும் தலையிடலாம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

உள்கட்சி விவகாரம்

அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறுகையில், "மந்திரிகளை நியமிப்பது, நீக்குவது, முக்கிய முடிவுகளை எடுப்பது, நிதி ஒதுக்குவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களில் முடிவு எடுக்க முதல்-மந்திரிக்கு அதிகாரம் உள்ளது. முதல்-மந்திரிக்கு எதிராக கவர்னரிடம் மந்திரி ஈசுவரப்பா புகார் அளித்தது சரியல்ல. 

இது உள்கட்சி விவகாரம். தனது பிரச்சினையை ஈசுவரப்பா எடுத்துக் கூறி இருக்க வேண்டும். ஈசுவரப்பாவின் இந்த செயல் ஆட்சி, கட்சிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

இதுபற்றி சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறும்போது, "மூத்த மந்திரியாக இருக்கும் ஈசுவரப்பா முதல்-மந்திரிக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்திருப்பது சரியான நடவடிக்கை அல்ல. முதல்-மந்திரிக்கு முழு அதிகாரம் உள்ளது. ஈசுவரப்பாவின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கட்சி, ஆட்சிக்கு மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் எடியூரப்பாவுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

இடைத்தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அரசை குறை கூற நாமே வாய்ப்பு கொடுத்தது போல் உள்ளது. இதை அவர் தவிர்த்திருக்க வேண்டும்" என்றார்.

முதல்-மந்திரிக்கு அதிகாரம்

விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கூறும்போது, "முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக ஈசுவரப்பா புகார் கொடுத்தது சரியல்ல. அவர் தனது பிரச்சினையை எடியூரப்பாவிடம் தனிப்பட்ட முறையில் பேசி தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முதல்-மந்திரிக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தின் அடிப்படையில் தான் எடியூரப்பா செயல்பட்டுள்ளார். ஈசுவரப்பாவின் செயல், கட்சிக்கும், ஆட்சிக்கும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

Next Story