மம்தா பானர்ஜி நீங்கள் வேறு தொகுதியில் போட்டியிடப்போவதாக வரும் தகவல்கள் உண்மைதானா? - பிரதமர் மோடி கேள்வி
நந்திகிராமையடுத்து நீங்கள் வேறு தொகுதியில் போட்டியிடப்போவதாக வரும் தகவல்கள் உண்மைதானா? என்று மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, 30 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. அதில் சுமார் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 1) நடைபெற்றது. அதிலும் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எஞ்சிய 6 தொகுதிகளுக்கு முறையே ஏப்ரல் 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
நேற்று நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 30 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடக்கம். மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். நந்திகிராம் தொகுதியில் நாங்கள் தான் வெற்றிபெறுவோம் என திரிணாமுல் காங்கிரஸ், பாஜக என இரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்குவங்காளத்தின் தெற்கு 24 பர்கனஸ் மாவட்டம் ஜோய்நகரில் பிரதமர் மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், மம்தா பானர்ஜி நீங்கள் வேறு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக வெளிவரும் தகவல்கள் உண்மைதானா? முதலில் நீங்கள் நந்திகிராமில் போட்டியிட்டீர்கள். அங்கு மக்கள் உங்களுக்கு பதிலளித்துவிட்டனர். நீங்கள் வேறு எங்கு சென்றாலும் மேற்குவங்காள மக்கள் உங்களுக்கு சரியான பதில் கொடுக்க தயாராக உள்ளனர்’ என்றார்.
Related Tags :
Next Story