மேற்குவங்காளம்: ஊழல் செய்தவர்கள் மே 2-ம் தேதிக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படுவர் - அமித்ஷா பேச்சு


மேற்குவங்காளம்: ஊழல் செய்தவர்கள் மே 2-ம் தேதிக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படுவர் - அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 2 April 2021 2:43 PM IST (Updated: 2 April 2021 2:43 PM IST)
t-max-icont-min-icon

ஊழல் செய்தவர்கள் மே 2-ம் தேதிக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படுவர் என்று தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் அமித்ஷா தெரிவித்தார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 6 தொகுதிகளுக்கு முறையே ஏப்ரல்  6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் அலிப்பூர்தூர் பகுதியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார கூட்டத்தில் அமித்ஷா கூறியதாவது:-

மம்தா நந்திகிராமில் தோல்வியடைந்துவிட்டார். நேற்று நடந்த சம்பவங்கள் அனைத்தும் நந்திகிராமில் மம்தா தோல்வியடைந்துவிட்டார் என்பதையே காட்டுகிறது. ஊழல் செய்தவர்களும், பாஜக தொண்டர்களை கொலை செய்தவர்களும் மே 2-ம் தேதிக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படுவர். அது நிலக்கரி ஊழல் கும்பல், குடிநீர் வாகன கும்பல் அல்லது பசுவதை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவர். இந்த விவகாரங்கள் தொடர்பாக விசாரணை செய்ய நாங்கள் சிறப்பு விசாரணை குழு அமைப்போம்.

ஊடுருவல்கள் தடுக்கப்படவேண்டுமா? இது நமது இளைஞர்களின் வேலைகளை இல்லையா? மம்தாவை தோற்கடித்து எங்களை வெற்றிபெறச்செய்யுங்கள். மனிதர்கள் மட்டுமல்ல பறவைகள் கூட சட்டவிரோதமாக மேற்கு வங்காளத்திற்குள் அனுமதிக்கப்படாது. அனைத்து அகதிகளும் மரியாதையாக நடத்தப்பட்டு அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்’ என்றார்.     

Next Story