ஆபாச வீடியோ விவகாரத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கைது செய்யப்படுவாரா? போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் பதில்


ஆபாச வீடியோ விவகாரத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கைது செய்யப்படுவாரா? போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் பதில்
x
தினத்தந்தி 2 April 2021 10:53 PM IST (Updated: 2 April 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

ஆபாச வீடியோ விவகாரத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கைது செய்யப்படுவாரா? என்பது குறித்து கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் பதிலளித்துள்ளார்.

பெங்களூரு,

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தலைமையில் சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டிடம் நேற்று பெங்களூரு கோரமங்களாவில் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஆபாச வீடியோ குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறப்பு விசாரணை குழு போலீசார், இந்த வழக்கை நியாயமான முறையிலும், சரியான பாதையிலும் விசாரித்து வருகிறார்கள் . அந்த குழுவில் நேர்மையான உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் இடம் பெற்றுள்ளனர். இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு போலீசாருக்கு எந்த விதமான நெருக்கடியும் இல்லை.

எந்த ஒரு முக்கிய நபர்களிடம் இருந்தும் போலீசாருக்கு நெருக்கடி வரவில்லை, அதற்கான சாத்தியமும் இல்லை. சிறப்பு விசாரணை குழு போலீசார் சுதந்திரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், யாருடைய தலையீடும் இல்லாமல் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளி கைது செய்யப்படவில்லை, அவரை போலீசார் கைது செய்யாமல் இருப்பது ஏன்? என்பது பற்றி தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இது ஒரு முக்கியமான வழக்கு. அதனால் பல கட்டங்களில் விசாரணை நடத்தப்பட வேண்டியது இருக்கிறது. தற்போது முதற்கட்ட விசாரணை தான் நடைபெற்று வருகிறது. எந்த சூழ்நிலையிலும் கோர்ட்டு உத்தரவு மீறப்படவில்லை. போலீசாருக்கு யார் மீது சந்தேகம் ஏற்படுகிறதோ?, அவர்களை அழைத்து விசாரிப்பார்கள்.

அதற்கான முழு அதிகாரம் சிறப்பு விசாரணை குழு போலீசாருக்கு உள்ளது. இன்னும் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெற வேண்டும். வழக்கு சம்பந்தப்பட்ட சாட்சிகளை திரட்ட வேண்டிய பொறுப்பு போலீசாருக்கு உள்ளது. முன்னாள் மந்திரி கைது செய்யப்படுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் சந்தர்ப்பத்தில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story