தார்வார் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் - மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் வேண்டுகோள்
தார்வார் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
உப்பள்ளி,
தார்வார் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா 2-வது அலை தொடங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்எச்சரிக்ைக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தநிலையில் தார்வார் கலெக்டர் அலுவலகத்தில் மாநில தொழில்துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேசுகையில்:-
தார்வார் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் வென்டிலேட்டர், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் கொரோனா விதிமுறைகளான முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, சானிடைசர் திரவம் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு(2020) மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கியது. அதேபோல் இந்தாண்டு(2021) கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. இது மிக ஆபத்தானது. ஆதலால் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதாரத்துறை, போலீசார் அதிக கவனமுடன் பணியாற்ற வேண்டும்.
குறிப்பாக கொரோனா முன்களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடும் மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மற்ற மாவட்டத்தை காட்டிலும் தார்வாரில் மருத்துவ வசதிகள் அதிகமாக உள்ளது. தார்வார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி, உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கலெக்டர் நித்தீஷ் பட்டேல், போலீஸ் கமிஷனர் லாபுராம் சிங், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story