இந்திய கடற்படை கராச்சி பிரிவில் 2 அதிவிரைவு படகுகள் சேர்ப்பு


இந்திய கடற்படை கராச்சி பிரிவில் 2 அதிவிரைவு படகுகள் சேர்ப்பு
x
தினத்தந்தி 3 April 2021 12:57 AM IST (Updated: 3 April 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை கராச்சி பிரிவில் 2 அதிவிரைவு படகுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தில் இந்திய கடற்படை கராச்சி பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த படை பிரிவு கார்வாரில் இருந்து பட்கல் வரை பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த படைப்பிரிவு கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 4-ந்தேதி தொடங்கப்பட்டது. அப்போது முதல் 2 நீர்மூழ்கி படகுகள் மற்றும் 2 நீர்மூழ்கி கிராப்ட்டுகள் பயன்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த கடலோர பகுதியில் பாதுகாப்பு பணியை அதிகரிக்கும் நோக்கத்தில், நேற்று முதல் ஐ.சி.ஜி.எஸ். சாவித்ரிபாய் புலே மற்றும் ஐ.சி.ஜி.எஸ். கஸ்தூரிபா காந்தி என்ற 2 அதிவிரைவு படகுகள் கடலோர மாவட்ட ரோந்து பணியில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரு படகுகளும் இதற்கு முன் புதிய மங்களூரு துறைமுக பகுதியில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்த அதிவிரைவு கப்பல்களை கோவாவில் இயங்கிவரும் ஷிப்யார்டு லிமிட்டெட் என்ற நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படகுகள் ஒரு மணி நேரத்திற்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியதாகும். பாதுகாப்புக்காக இந்த படகில் 30 எம்.எம்.சி.ஆர்.என். ரக துப்பாக்கி பொருத்தப்பட்டு உள்ளன.

மேலும் இந்த படகுகள் சுலபமாக திருப்பவும் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. புயல், சூறாவளி, ராட்சத அலைகளில் இந்த படகுகள் இயங்கக் கூடியது. கடலில் ரோந்து பணியில் ஈடுபடுவது, பயங்கரவாதிகளை கண்காணிப்பது, மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, கடத்தலில் ஈடுபடுவதை தடுக்க இந்த படகுகள் உதவியாக இருக்கும் வகையில் நவீன தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Next Story