கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது


கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது
x
தினத்தந்தி 3 April 2021 2:14 AM IST (Updated: 3 April 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொேரானா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும், எக்காரணம் கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும் தலைமை செயலாளர் ரவிக்குமார் கூறினார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் கொேரானா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும், எக்காரணம் கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும் தலைமை செயலாளர் ரவிக்குமார் கூறினார்.

ஆலோசனை நடத்தினார்

கர்நாடகத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனாலும் மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா ஏற்கனவே கூறினார். இந்த நிலையில் மாநில அரசின் தலைமை செயலாளர் ரவிக்குமார், எக்காரணம் கொண்டும் கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர் டெல்லியில் இருந்தபடி அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தலைமை செயலாளர் ரவிக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கட்டுப்பாடுகள்

கொேரானா பரவல் அதிகரித்து உள்ளதால் மத்திய அமைச்சரவை செயலாளர் கவலை தெரிவித்தார். மராட்டியம், பஞ்சாப் மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள் மற்றும் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போடவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு, இரவு ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம். அதே நேரத்தில் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

படுக்கைகள்

திருவிழா, ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளை மூடவும் முடிவு செய்துள்ளோம். அதனால் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பெங்களூரு, மைசூரு, கலபுரகி, பீதரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் 20 சதவீத படுக்கைகளை ஒதுக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளோம். தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. அதனால் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.

Next Story