ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண்ணிடம் விசாரணை நிறைவு
ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண்ணிடம் கடந்த 4 நாட்களாக நடந்த விசாரணை நிறைவு பெற்றது. ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிரான முக்கிய ஆவணங்களை இளம்பெண் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு:ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண்ணிடம் கடந்த 4 நாட்களாக நடந்த விசாரணை நிறைவு பெற்றது. ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிரான முக்கிய ஆவணங்களை இளம்பெண் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இளம்பெண் வாக்குமூலம்
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ கடந்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மீது கற்பழிப்பு வழக்குப்பதிவாகி உள்ளது. அந்த வழக்கு சிறப்பு விசாரணை குழு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த மாதம் 30-ந் தேதி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் ஆஜராகி இளம்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார். அன்றைய தினத்தில் இருந்து இளம்பெண்ணிடம் சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4-வது நாளாக விசாரணை
இளம்பெண் கற்பழிக்கப்பட்டுள்ளாரா? என்பது குறித்து மருத்துவ பரிசோதனை நடத்துள்ளது. அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கும் இளம்பெண்ணை போலீசார் அழைத்து சென்று விசாரித்திருந்தனர். இந்த நிலையில், நேற்று 4-வது நாளாகவும் விசாரணைக்கு ஆஜராகும்படி இளம்பெண்ணுக்கு போலீசார் உத்தரவிட்டு இருந்தார்கள்.
அதன்படி, நேற்று காலையில் பெங்களூரு மடிவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்தில் விசாரணை அதிகாரி கவிதா முன்னிலையில் இளம்பெண் ஆஜரானார். நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்புக்கு இளம்பெண்ணை அழைத்து சென்றபோது போலீசாருக்கு கிடைத்த தகவல்கள் குறித்தும், ஆர்.டி.நகரில் உள்ள தங்கும் விடுதியில் சிக்கிய தகவல்கள் குறித்தும் நேற்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கட்டாயப்படுத்தி பாலியல்...
அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு ரமேஷ் ஜார்கிகோளியை சந்திக்க தான் தனியாக சென்றதாகவும், தன்னுடன் யாரும் வரவில்லை என்றும் இளம்பெண் தெரிவித்துள்ளார். ரமேஷ் ஜார்கிகோளிக்காக அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக காத்திருந்ததாகவும், நீண்ட நேரம் கழித்து தான் அவர் வந்ததாகவும் இளம்பெண் கூறியுள்ளார். மேலும் ரமேஷ் ஜார்கிகோளி வந்ததும் குடியிருப்பில் இருந்த வேலைக்காரர்கள் வெளியே சென்று விட்டார்கள்.
அதன்பிறகு ரமேஷ் ஜார்கிகோளி என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார். அவரிடம் இருந்து விலக நினைத்தபோது தகாத வார்த்தையில் திட்டினார். பல மணிநேரம் அடுக்குமாடி குடியிருப்பில் தான் 2 பேரும் இருந்தோம். ஆனால் எத்தனை மணி நேரம் இருந்தோம் என்று நியாபகம் இல்லை. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்னை ஏமாற்றி மோசடி செய்துள்ளார் என்று போலீசாரிடம் இளம்பெண் தெரிவித்துள்ளார்.
செல்போன் ஆய்வு
அதே நேரத்தில் போலீசார் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு இளம்பெண் பதிலளிக்காமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. அதாவது பாலியல் பலாத்காரம் நடந்த போது, அதனை வீடியோ எடுத்தது யார்?, என்ன காரணத்திற்காக பையில் கேமராவை வைத்து கொண்டு அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றீர்கள்?, ஆர்.டி.நகரில் உள்ள வீட்டில் சிக்கிய ரூ.9 லட்சத்தை கொடுத்தது யார்?, அது எப்படி கிடைத்தது? உள்ளிட்ட கேள்விகளுக்கு இளம்பெண் பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
அத்துடன் ஆர்.டி.நகரில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து ஒரு செல்போன் போலீசாருக்கு சிக்கி இருந்தது. அந்த செல்போனில் இருந்து இளம்பெண் யாருக்கெல்லாம் பேசி உள்ளார்? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தார்கள். பின்னர் அந்த செல்போன் தடயவியல் ஆய்வுக்காக நேற்று போலீசார் அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நரேஷ்கவுடா, ஸ்ரவன் குறித்தும் இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.
விசாரணை நிறைவு
ஆபாச வீடியோ விவகாரத்தில் கடந்த மாதம் 30-ந் தேதியில் இருந்து நேற்று வரை போலீசார் தொடா்ந்து 4 நாட்களாக இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். நேற்றுடன் அவரிடம் நடந்த விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.
அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்தால் எப்போது வேண்டுமானாலும் ஆஜராக வேண்டும் என்று கூறி இளம்பெண்ணை நேற்று இரவு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் நரேஷ்கவுடா, ஸ்ரவன் தொடர்பு கொண்டால், உடனடியாக தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று இளம்பெண்ணுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன் இளம்பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இளம்பெண்ணிடம் கடந்த 4 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில், ரமேஷ் ஜார்கிகோளி தன்னுடன் பேசியது, பரிசு பொருட்கள் வழங்கியது, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியது சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை போலீசாரிடம் இளம்பெண் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story