கர்நாடகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு அரசு சார்பில் தற்காப்பு பயிற்சி அளிக்க முடிவு


போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை.
x
போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை.
தினத்தந்தி 3 April 2021 2:49 AM IST (Updated: 3 April 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தடயவியல் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றும், கல்லூரி மாணவிகளுக்கு அரசு சார்பில் தற்காப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தடயவியல் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றும், கல்லூரி மாணவிகளுக்கு அரசு சார்பில் தற்காப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கொடிநாள் நிகழ்ச்சி

பெங்களூரு கோரமங்களா மைதானத்தில் நேற்று நடைபெற்ற போலீஸ் கொடி நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

கர்நாடக போலீசாருக்கு திறமையாக பணியாற்றுபவர்கள் என்ற பெயர் கிடைத்துள்ளது. நாட்டிலேயே கர்நாடக போலீசார் தான் வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுப்பதில் சிறப்பாக பணியாற்றுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். இதனை நாம் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள, இதற்கு முன்பு பணியாற்றியதில் இருந்து, இன்னும் அதிகமாக பணியாற்ற வேண்டும்.

  இதனை ஒவ்வொரு போலீசாரும் தங்களது மனதில் வைத்து கொண்டு பணியாற்ற வேண்டும். போலீசாரின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வரும். அதனை போலீசார் காது கொடுத்து கேட்க வேண்டாம். அந்த குற்றச்சாட்டுகளை பொருட்படுத்தாமல், போலீசார் நேர்மையாக பணியாற்ற வேண்டும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதற்கு போலீசாரே காரணம். மாநிலத்தில் ரவுடிகள் முற்றிலும் ஒடுக்கப்பட்டுள்ளனர்.

தடயவியல் ஆய்வு மையம்

தற்போது பல்வேறு முக்கிய வழக்குகளின் விசாரணைக்காக, பெங்களூருவில் உள்ள தடயவியல் மையத்திற்கு தான் மற்ற மாவட்ட போலீசார் வர வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு முக்கிய வழக்குகளின் விசாரணைக்காக பெங்களூருவுக்கு வருவதால், தேவையில்லாமல் நாட்கள் வீணடிக்கப்படுகிறது. வழக்குகளின் விசாரணையும் தாமதமாகிறது.

 இதுபோன்று, வழக்குகளின் விசாரணை தாமதம் இன்றி நடைபெறுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தடயவியல் ஆய்வு மையம் அமைக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன்மூலம் வழக்கு விசாரணை விரைவில் முடிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும்.

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் போலீசாரும், தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள். 

இதனை கருத்தில் கொண்டு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள், தங்களுக்கு தானே பாதுகாப்பை ஏற்படுத்தி கொள்ள, மாணவிகளுக்கு அரசு சார்பில் சிறப்பு தற்காப்பு பயிற்சி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பயிற்சி பெறும் கல்லூரி மாணவிகள் சில நேரங்களில் போலீசாரின் உதவியை நாடாமல் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story