கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்


கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்
x
தினத்தந்தி 3 April 2021 3:55 AM IST (Updated: 3 April 2021 3:55 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாக இருக்கும் நிலையில், நாளை முதல் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள பசவகல்யாண், மஸ்கி, பெலகாவி மக்களவை ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 17-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. மனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி நிறைவடைந்தது.

இதில் பசவ கல்யாண் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாலா நாராயணா, மஸ்கியில், பா.ஜனதா சார்பில் சரனு சலகார், ஜனதா தளம் (எஸ்) சார்பில் சையத் யஷரப்அலி ஆகியோரும், மஸ்கி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பசவனகவுடா துருவிகல், பா.ஜனதா சார்பில் பிரதாப்கவுடா பட்டீல் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

பெலகாவி மக்களவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் மங்களா சுரேஷ் அங்கடி, காங்கிரஸ் சார்பில் சதீஸ் ஜார்கிகோளி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். மஸ்கி, பெலகாவி மக்களவை தொகுதிகளில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அந்த 3 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 97 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் பரிசீலனையின்போது, 42 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

இதில் பெலகாவி மக்களவை தொகுதியில் 18 வேட்பாளர்கள், பசவகல்யாண் தொகுதியில் 14 வேட்பாளர்கள், மஸ்கி தொகுதியில் 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. அதன் பிறகு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்ய கட்சிகளின் தலைவர்கள் தயாராகி வருகிறார்கள்.

Next Story