மேற்குவங்காளம்: பாஜக-வை 'சுற்றுலா கும்பல்’ என்று விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்...
பாஜக ஒரு சுற்றுலா கும்பல் என்று திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் விமர்சனம் செய்துள்ளார்.
கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 6 தொகுதிகளுக்கு முறையே ஏப்ரல் 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த 1-ம் தேதி நடந்து முடிந்த இரண்டாம் கட்ட தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் உள்ளடக்கம். மம்தாவை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் தாங்கள் வெற்றிபெறுவோம் என்று இரு கட்சிகளும் மாறிமாறி கூறிவருகின்றன. மேலும், நந்திகிராமில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற அச்சத்தால் மம்தா வேறு தொகுதியில் போட்டியிட உள்ளதாக பாஜக தெரிவித்து வருகிறது. பாஜகவின் கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துவருகிறது.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டெரிக் ஓ பிரையன் இன்று பேசுகையில், நாங்கள் நந்திகிராமில் வெற்றிபெற்றுவிட்டோம். வேறு எந்த தொகுதியிலும் மம்தா போட்டியிடப்போவதில்லை. இது அனைத்தும் பாஜகவின் மன ரீதியிலான விளையாட்டு.
மேற்குவங்காள அரசியல் நிலவரம் தொடர்பாக நேற்று இரவு நரேந்திரமோடியும், அமித்ஷாவும் ஆலோசனை நடத்தியுள்ளனர். பாஜகவை விட திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியும். 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது நாங்கள் (திரிணாமுல் காங்கிரஸ்) பாஜகவை விட 3 சதவிகிதம் முன்னிலை பெற்றோம். இந்த முறை அது 6 சதவிகிதமாக உயரும். பெரிய அளவில் பேச்சுக்கள் இருந்தபோதும் சுற்றுலா கும்பல் (பாஜக) பின்தங்கியே உள்ளது. ஆகையால் தான் அவர்கள் (பாஜக) மனரீதியிலான விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.
Related Tags :
Next Story