மதசார்பற்ற தன்மை காரணமாக கேரள மாநிலம் பா.ஜனதா வளர ஏற்ற வளமான மண் அல்ல; முதல்-மந்திரி பினராயி விஜயன்


பினராயி விஜயன்
x
பினராயி விஜயன்
தினத்தந்தி 3 April 2021 11:26 PM IST (Updated: 3 April 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

மதசார்பற்ற தன்மை காரணமாக கேரள மாநிலம் பா.ஜனதா வளருவதற்கு ஏற்ற வளமான மண் அல்ல என முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

தீவிர பிரசாரம்

கேரளாவில் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. அதேநேரம் பா.ஜனதாவும் கேரளாவில் தங்கள் இருப்பை உறுதி செய்ய போராடி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கேரளாவில் பா.ஜனதா வளராது என முதல்-மந்திரி பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

கண்ணூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

வாக்கு சதவீதத்தில் வீழ்ச்சி

கேரள மாநிலம், பா.ஜனதா வளர்வதற்கேற்ற வளமான மண் அல்ல. சங் பரிவார் அமைப்புகளுக்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எதிர்ப்பும், மக்களின் மதசார்பற்ற மனநிலையும் இந்த மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய தடைக்கற்களாக உள்ளன.கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் நேமம் சட்டசபை தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் அந்த ஒற்றை இடத்தைக்கூட இடதுசாரிகள் பா.ஜனதாவுக்கு கொடுக்காது. இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட பா.ஜனதா வெற்றி பெறாது. அதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் கட்சியின் வாக்கு சதவீதத்திலும் வீழ்ச்சி ஏற்படும்.

மக்கள் மறக்கமாட்டார்கள்

தேர்தல் பிரசாரத்தின்போது கேரளாவின் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடியும், பா.ஜனதா தேசிய தலைவர்களும் பேசுகிறார்கள். ஆனால் மாநிலத்தின் இந்த வளர்ச்சியை சீர்குலைக்கத்தான் மத்திய அரசு உண்மையிலேயே முயன்றது. கேரள வெள்ளத்தின்போது மத்திய அரசு மாநிலத்துக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை மாநில மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். வெள்ளத்தின் போது வழங்கப்பட்ட மத்தியப்படைகள், அரிசி ஒதுக்கீடு போன்றவற்றுக்கு கட்டணம் கோரிய மத்திய அரசின் செயல்களை யாரும் மறக்க முடியாது.

இரட்டை சகோதரர்கள்

மாநிலத்தில் பா.ஜனதாவும், காங்கிரசும் இரட்டை சகோதரர்களாக சேர்ந்து இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை எதிர்க்க முயற்சிக்கின்றன. ஆனால் இதை கேரள மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் இந்த தேர்தலில் தகுந்த பாடத்தை இந்த கட்சிகளுக்கு கற்பிப்பார்கள்.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

 


Next Story