சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வரும் 6 ஆம் தேதி புஷ்ப யாகம் - தேவஸ்தானம் அறிவிப்பு


சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வரும் 6 ஆம் தேதி புஷ்ப யாகம் - தேவஸ்தானம் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 April 2021 12:59 AM IST (Updated: 4 April 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வரும் 6 ஆம் தேதி புஷ்ப யாகம் நடைபெற உள்ளதாக தேசஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை,

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா முடிந்ததும், வழக்கம்போல் புஷ்ப யாகமும் நடக்கும். பிரம்மோற்சவ விழாவில் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஏதேனும் தெரிந்தும், தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை நிவர்த்தி செய்வதற்காக புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 2-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை 9 நாட்கள் நடந்த பிரம்மோற்சவ விழாவையொட்டி வரும் 6-ந்தேதி புஷ்ப யாகம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இதில் கலந்து கொள்ள பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டவில்லை.

முன்னதாக நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை, புண்ணியாவதனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் ஆகியவை நடக்கிறது. 6-ந்தேதி காலை 10 மணியில் இருந்து 11 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

அதைத்தொடர்ந்து மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை துளசி, சாமந்தி, கன்னேரு, முகலி, மல்லிகை, ஜாதிமல்லி, சம்பங்கி, ரோஜா உள்பட பல்வேறு வகையான மலர்களால் புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடக்கிறது. புஷ்ப யாகத்தால் 6-ந்தேதி கல்யாண உற்சவ சேவை ரத்து செய்யப்படுகிறது.

Next Story