சொந்த கட்சியிலேயே பாலியல் துன்புறுத்தல்; கேரள சட்டசபை தேர்தலில் இருந்து விலகிய திருநங்கை


சொந்த கட்சியிலேயே பாலியல் துன்புறுத்தல்; கேரள சட்டசபை தேர்தலில் இருந்து விலகிய திருநங்கை
x
தினத்தந்தி 4 April 2021 1:03 AM IST (Updated: 4 April 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் சொந்த கட்சியிலேயே பாலியல் துன்புறுத்தலை சந்தித்த திருநங்கை சட்டசபை தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.

கொச்சி,

கேரள சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.  14 மாவட்டங்களை கொண்ட 140 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும்.

இந்த தேர்தலில் ஜனநாயக சமூக நீதி கட்சியும் போட்டியிடுகிறது.  இந்த கட்சி சார்பில் மலப்புரம் மாவட்டத்தின் வெங்காரா தொகுதியில் போட்டியிட அனன்யா குமாரி அலெக்ஸ் (வயது 28) என்ற திருநங்கைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், பாலின வேற்றுமை மற்றும் பாலியல் துன்புறுத்தலை சொந்த கட்சியிலேயே சந்தித்த அலெக்ஸ், கட்சி மற்றும் தன்னை துன்புறுத்திய கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தேர்தலில் போட்டியில் இருந்து வாபஸ் பெற்று விட்டேன்.  ஜனநாயக சமூக நீதி கட்சியில் இருந்து பாலின வேற்றுமை மற்றும் பாலியல் துன்புறுத்தலை சந்தித்தேன்.

அதிக அளவில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக அவர்கள் என்னிடம் விளையாட முயற்சிக்கிறார்கள்.  என்னை முன்னிலைப்படுத்துவதற்கு அவர்களிடம் சில திட்டங்களும் மற்றும் காரணங்களும் உள்ளன.

வெங்காரா தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் குஞ்ஞாலிகுட்டிக்கு எதிராக மோசமாக பேசும்படி என்னை கட்டாயப்படுத்தினர்.  நடப்பு அரசுக்கு எதிராக மோசமாக பேசும்படியும் என்னை கட்டாயப்படுத்தினர்.  பர்தா அல்லது புர்கா அணிந்து பிரசாரத்தில் ஈடுபடவும் அவர்கள் என்னை கட்டாயப்படுத்தினர்.

ஆனால், அவற்றை நான் மறுத்து விட்டேன்.  இதனை தொடர்ந்து, கட்சி உறுப்பினர்கள் சிலர் தொலைத்து விடுவோம் என்றும் எனது அரசியல் வாழ்க்கையையே ஒழித்து கட்டி விடுவோம் என்றும் என்னிடம் கூறினார்கள்.

கேரள மக்கள் ஜனநாயக சமூக நீதி கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என நான் கேட்டு கொள்கிறேன்.  நான் கட்சியிலும் இல்லை.  கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரும் இல்லை.  வெங்காராவில் பிரசாரம் செய்யாமல் நிறுத்தி விட்டேன்.  எனது உடல்நிலையும் மோசமடைந்து உள்ளது.  எனக்கு விரைவில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். 

கேரள சட்டசபை தேர்தலில் முதன்முறையாக திருநங்கை வேட்பாளர் போட்டியிடும் சூழலில் அவர் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுள்ளதும், அதற்கு அவர் கூறுகிற காரணங்களும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Next Story