பா.ஜனதா மாநாட்டில் காற்றில் பறந்த கொரோனா தடுப்பு விதிமுறை


பா.ஜனதாவினர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதை படத்தில் பார்க்கலாம்.
x
பா.ஜனதாவினர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதை படத்தில் பார்க்கலாம்.
தினத்தந்தி 4 April 2021 2:30 AM IST (Updated: 4 April 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

பசவகல்யாணில் நடந்த பாஜனதா மாநாட்டில் கொரோனா தடுப்பு விதிமுறை காற்றில் பறக்க விடப்பட்டது.

பெங்களூரு: பசவகல்யாணில் நடந்த பா.ஜனதா மாநாட்டில் கொரோனா தடுப்பு விதிமுறை காற்றில் பறக்க விடப்பட்டது.

2வது அலை

கர்நாடகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களை அரசு அறிவுறுத்தி வருகிறது. 

மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அரசின் உத்தரவை மீறி பா.ஜனதா சார்பில் ஒரு மாநாடு நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

முகக்கவசம் அணியாத தலைவர்கள்

பீதர் மாவட்டம் பசவகல்யாண் சட்டசபை தொகுதிக்கு வருகிற 17ந் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பாஜனதா சார்பில் சரணரு சால்கார் என்பவர் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று இடைத்தேர்தலையொட்டி பசவகல்யாண் டவுனில் உள்ள சாந்தி நிகேதன் பள்ளி மைதானத்தில் பா.ஜனதா சார்பில் பிரமாண்ட மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சரணரு சால்காரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

ஆனால் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சரணரு சால்கார், நளின்குமார் கட்டீல் உள்பட எந்த தலைவரும் முகக்கவசம் அணிந்து இருக்கவில்லை. அவர்கள் சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கவில்லை. அதுபோல மாநாட்டில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர். அவர்களும் முகக்கவசம் அணியவில்லை. சமூக இடைவெளி விட்டு அமரவில்லை. இதுதொடர்பாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. 

இந்த வீடியோக்களை பார்ப்பவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகள் எல்லாம் பொதுமக்களுக்கு மட்டும் தானா? அரசியல் கட்சி தலைவர்களுக்கு கிடையாதா? என்று கேள்வி எழுப்பி தங்களது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

நடவடிக்கை

இதுகுறித்து பசவகல்யாண் தாசில்தார் நாகய்யா ஹிரேமத் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:- பா.ஜனதா மாநாட்டில் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது. அந்த மாநாட்டில் கொரோனா தடுப்பு விதிகள் மீறப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அந்த மாநாட்டின் வீடியோவை முழுமையாக பார்த்த பின்னர் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story