ஆபாச வீடியோ விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் மந்திரி டி.சுதாகருக்கு தொடர்பு?


ஆபாச வீடியோ விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் மந்திரி டி.சுதாகருக்கு தொடர்பு?
x
தினத்தந்தி 4 April 2021 2:55 AM IST (Updated: 4 April 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.சுதாகருக்கு தொடர்பு இருக்கலாம் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு: ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.சுதாகருக்கு தொடர்பு இருக்கலாம் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இளம்பெண்ணிடம் விசாரணை

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளம்பெண் கடந்த மாதம் (மார்ச்) 30-ந் தேதி போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். பின்னர் அவர் சிறப்பு விசாரணை குழுவினரின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று 5-வது நாளாக இளம்பெண்ணிடம் விசாரணை நடந்தது.

அப்போது இளம்பெண்ணிடம் நீங்கள் கடத்தப்பட்டதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்து உள்ளது உள்பட பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பினர். அப்போது இளம்பெண் என்னை யாரும் கடத்தி செல்லவில்லை என்றும், ஆபாச வீடியோ வெளியானதும் எனது நண்பர் ஆகாசுடன் கோவாவுக்கு சென்றேன் என்றும், அங்கு தோழி வீட்டில் தங்கி இருந்ததாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

4½ மணி நேரம்

கோவாவுக்கு சென்று ஆகாஷ் தன்னை விட்டுவிட்டு வந்தபின்னர், 3 முறை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், தனது பெற்றோர் சிலரது காவலில் உள்ளதாகவும், அவர்கள் மனஅழுத்ததில் உள்ளதாகவும் இளம்பெண் கூறியதாக தெரிகிறது. மேலும் இந்த வழக்கில் தன்னை குற்றவாளியாக்க ரமேஷ் ஜார்கிகோளி முயற்சி செய்வதாக இளம்பெண் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

நேற்று இளம்பெண்ணிடம் போலீசார் 4½ மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆர்.டி.நகரில் உள்ள விடுதிக்கு இளம்பெண்ணை அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது இளம்பெண் பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர்.

முன்னாள் மந்திரிக்கு தொடர்பு

அந்த செல்போனை ஆய்வு செய்த போது அதில் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.சுதாகரும், இளம்பெண்ணும் பேசி இருந்தது தெரியவந்தது. மேலும் டி.சுதாகருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே பண பரிமாற்றம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கில் டி.சுதாகருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், அவருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு போலீசார் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னாள் மந்திரி டி.சுதாகர் சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தொகுதியில் கடந்த 2004-ம் ஆண்டும், இரியூர் தொகுதியில் 2008-2013-ம் ஆண்டும் நடந்த தேர்தல்களில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். 2008-ம் ஆண்டு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது அவரது மந்திரிசபையில் டி.சுதாகர் சமூக நலத்துறை மந்திரியாக பணியாற்றினார். பின்னர் பா.ஜனதாவில் இருந்து விலகி அவர் காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.சுதாகர் மறுப்பு

இதுகுறித்து முன்னாள் மந்திரி டி.சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண்ணிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் நான் இளம்பெண்ணுடன் பேசி இருப்பதாகவும், பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் வரும் தகவல்கள் ஆச்சரியம் அளிக்கிறது. ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ள இளம்பெண்ணுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நான் முன்னாள் மந்திரி என்பதால், ஆயிரக்கணக்கானோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். அதுபோல், அந்த இளம்பெண்ணும் தொடர்பு கொண்டு பேசி இருக்கலாம். அதனை நான் மறுக்கவில்லை.

ஆனால் ஆபாச வீடியோ விவகாரத்தில் தொடர்பு இல்லை. பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக வெளிவரும் தகவல்களை நம்ப முடியவில்லை, வியப்பாக இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் என்னிடம் விசாரணை நடத்த விரும்பினால், நடத்தட்டும். போலீசார் நோட்டீசு அனுப்பினால் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன். என் மீது தவறு இல்லாத பட்சத்தில் நான் ஏன் பயப்பட வேண்டும். தேவைப்பட்டால் நானே போலீசாரிடம் விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story