எடியூரப்பா-கட்சிக்கு எதிராக பேசுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை; பா.ஜனதா மேலிடம் எச்சரிக்கை
முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் கட்சிக்கு எதிராக பேசுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜனதா மேலிடம் எச்சரித்துள்ளது.
பெங்களூரு: முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் கட்சிக்கு எதிராக பேசுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜனதா மேலிடம் எச்சரித்துள்ளது.
எடியூரப்பா மீது குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை மந்திரியாக இருந்து வருபவர் ஈசுவரப்பா. இவர், தனது துறையில் முதல்-மந்திரி எடியூரப்பா தலையிடுவதாக குற்றம்சாட்டி கவர்னரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் கர்நாடக பா.ஜனதாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இதுபோல், சில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் பகிரங்கமாக கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதனை கையில் எடுத்து கொண்டு பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகிறார்கள். மாநிலத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பகிரங்கமாக கருத்து கூறி வருவது பா.ஜனதாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது.
ஒழுங்கு நடவடிக்கை
இந்த விவகாரம் குறித்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கர்நாடக மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பா.ஜனதா மேலிட தலைவர்கள் தீவிரமாக எடுத்து கொண்டு உள்ளனர்.
இதுபற்றி மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு, பா.ஜனதா மேலிட தலைவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன்படி, அரசுக்கு எதிராகவும், பா.ஜனதா கட்சிக்கு எதிராகவும் பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் கூறும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு மேலிட தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், பிற தலைவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுபற்றி முதலில் மாநில தலைவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கட்சிக்குள்ளேயே பிரச்சினகைளை பேசி தீர்த்து கொள்ள வேண்டும். யாரும் பகிரங்கமாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் குற்றச்சாட்டு கூறக்கூடாது.
அவ்வாறு கட்சியின் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பா.ஜனதா மேலிட தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
Related Tags :
Next Story