பெல்தங்கடி அருகே ஆக்ரோஷ சண்டை; மலைப்பாம்பை விழுங்கிய 14 அடி நீள ராஜநாகம்
பெல்தங்கடி அருகே மலைப்பாம்பும், ராஜநாகமும் ஆக்ரோஷமாக சண்டையிட்டன. இறுதியில் மலைப்பாம்பை விழுங்கிய 14 அடி நீள ராஜநாகம் ஊர்ந்து செல்ல முடியாமல் கிடந்தது. அதனை பாம்புபிடி வீரர் மீட்டு வனப்பகுதியில் விட்டார்.
பெங்களூரு: பெல்தங்கடி அருகே மலைப்பாம்பும், ராஜநாகமும் ஆக்ரோஷமாக சண்டையிட்டன. இறுதியில் மலைப்பாம்பை விழுங்கிய 14 அடி நீள ராஜநாகம் ஊர்ந்து செல்ல முடியாமல் கிடந்தது. அதனை பாம்புபிடி வீரர் மீட்டு வனப்பகுதியில் விட்டார்.
மலைப்பாம்பை விழுங்கிய ராஜநாகம்
தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் சோமந்தடுக்கா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த நிலையில் இந்த கிராமத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதி அருகே நேற்று ஒரு ராஜநாகப்பாம்பு, மலைப்பாம்புடன் பின்னிப்பிணைந்து ஆக்ரோஷமாக சண்டை போட்டது.
இரு பாம்புகளும் ஆக்ரோஷமாக மோதின. இதை அறிந்து அந்தப் பகுதி மக்கள் வேடிக்கை பார்க்க அங்கு கூடினர். சிலர் பாம்புகளின் சண்டையை செல்போனில் வீடியோவாக படம் பிடித்தப்படி இருந்தனர். இந்த சண்டையின் இறுதியில் ராஜநாகம், மலைப்பாம்பை விழுங்கியது. இதனால் ராஜநாகம் நகர்ந்து செல்ல முடியாமல் அதே இடத்தில் கிடந்தது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வனப்பகுதியில் விடப்பட்டது
இந்த சம்பவம் பற்றி அவர்கள் பெல்தங்கடியை சேர்ந்த பாம்பு பிடி வீரரான ஸ்னேக் அசோக்கிற்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து மலைப்பாம்பை விழுங்கிவிட்டு ஊர்ந்து செல்ல முடியாமல் கிடந்த ராஜநாகத்தை லாவகமாக பிடித்து ஒரு சாக்குப்பையில் போட்டார்.
பின்னர் அந்த ராஜநாகத்தை அவர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். மலைபாம்பை ராஜநாகம் விழுங்கிய சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மலைப்பாம்பை விழுங்கிய ராஜநாகம் 14 அடி நீளம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story