போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும் முன்பாக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி முன்ஜாமீன் வாங்க முடிவு
போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும் முன்பு கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்க முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி முடிவு செய்துள்ளார். கைதாக வாய்ப்புள்ளதால் வக்கீல்கள் இந்த அறிவுரையை வழங்கி உள்ளனர்.
பெங்களூரு: போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும் முன்பு கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்க முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி முடிவு செய்துள்ளார். கைதாக வாய்ப்புள்ளதால் வக்கீல்கள் இந்த அறிவுரையை வழங்கி உள்ளனர்.
கைதாக வாய்ப்பு
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனா. இந்த வழக்கில் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகும்படி ரமேஷ் ஜார்கிகோளிக்கு சிறப்பு விசாரணை குழு போலீசார் நோட்டீசு வழங்கி இருந்தார்கள். ஆனால் உடல் நலக்குறைவை காரணம் காட்டி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
விசாரணைக்கு ஆஜராக 2 நாட்கள் காலஅவகாசம் கேட்டு இருப்பதால், நாளை (திங்கட்கிழமை) ரமேஷ் ஜார்கிகோளி ஆஜராவார் என்று, அவரது வக்கீல் ஷியாம் சுந்தர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இளம்பெண் அளித்துள்ள வாக்குமூலத்தின் பேரில் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்போது ரமேஷ் ஜார்கிகோளி கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்ஜாமீன் பெற முடிவு
இதையடுத்து, மூத்த வக்கீல்களுடன் ரமேஷ் ஜார்கிகோளி, அவரது சகோதரர் பாலசந்திர ஜார்கிகோளி ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து வக்கீல்களின் கருத்துகளை சகோதரர்கள் கேட்டு அறிந்து கொண்டுள்ளனர்.
அப்போது இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜரானால் ரமேஷ் ஜார்கிகோளி கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும், எனவே கோர்ட்டில் மனு தாக்கல் செய்து முன்ஜாமீன் வாங்க நடவடிக்கை எடுக்கும்படி வக்கீல்கள் அறிவுரை வழங்கி இருப்பதாக தெரிகிறது.
இதன் காரணமாக நாளையும் விசாரணைக்கு ரமேஷ் ஜார்கிகோளி ஆஜராக மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கிடைத்த பின்பே அவர் விசாரணைக்கு ஆஜராவார் என்றும் சொல்லப்படுகிறது.
Related Tags :
Next Story