விடுதியில் தண்ணீர் வராததால் துணி துவைக்க சென்றபோது ஹேமாவதி ஆற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் சாவு
விடுதியில் தண்ணீர் வராததால் துணி துவைக்க சென்றபோது ஹேமாவதி ஆற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார். அவருடைய உடலை எடுக்க விடாமல் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹாசன்: விடுதியில் தண்ணீர் வராததால் துணி துவைக்க சென்றபோது ஹேமாவதி ஆற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார். அவருடைய உடலை எடுக்க விடாமல் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி மாணவர் சாவு
ராமநகர் மாவட்டம் சென்னபட்டணாவை சேர்ந்தவர் பிருத்விஷ் (வயது 17). இவர் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா ஒன்னகொப்பலு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர், அங்குள்ள சமூக நலத்துறைக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியில் தண்ணீர் வரவில்லை என தெரிகிறது. இதனால் துணிகளை துவைப்பதற்காக பிருத்விஷ் மற்றும் அவருடைய நண்பர்கள், அருகே உள்ள ஹேமாவதி ஆற்றுக்கு சென்றனர்.
அங்கு வைத்து அவர்கள் துணி துவைத்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், பிருத்விஷ் எதிர்பாராதவிதமாக கால் தவறி ஹேமாவதி ஆற்றுக்குள் தவறி விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். அவரை சக மாணவர்கள் மீட்க முயன்றனர். ஆனாலும் அதற்குள் பிருத்விஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
போராட்டம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒலேநரசிப்புரா போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், தீயணைப்பு படையினர் ஹேமாவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பிருத்விசின் உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முற்பட்டனர். அப்போது சக மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பிருத்விசின் பெற்றோா், போலீசாரை தடுத்தனர்.
மேலும் அவர்கள் உடலை எடுக்க விடாமல் அதேப்பகுதியில் வைத்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விடுதியில் 3 நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதுதொடர்பாக விடுதி வார்டனிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் துணி துவைக்கவும், குளிக்கவும் மாணவர்கள் அருகில் உள்ள ஹேமாவதி ஆற்றுக்கு செல்கிறார்கள். இவ்வாறு துணி துவைக்க சென்றபோது தான் பிருத்விஷ் உயிரிழந்துள்ளார். எனவே இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சமூக நலத்துறை அதிகாரி மஞ்சுநாத் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின்னர் போலீசார் மாணவர் பிருத்விசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒலேநரசிப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story