விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது விவகாரம்: விசாரணை குழுவின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்


விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது விவகாரம்: விசாரணை குழுவின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
x
தினத்தந்தி 3 April 2021 11:57 PM GMT (Updated: 3 April 2021 11:57 PM GMT)

விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது விவகாரத்தில், போலீசாரின் நடவடிக்கை குறித்த விசாரணை குழுவின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

திரவ எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற இஸ்ரோவின் விஞ்ஞானி நம்பி நாராயணன், பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 50 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நம்பி நாராயணன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு ஒருகட்டத்தில் போலீசிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாறியது. சி.பி.ஐ. விசாரணையில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் நம்பி நாராயணனை தேவையின்றி கைது செய்து நடவடிக்கை எடுத்த போலீஸ் உயர் அதிகாரிகள் சி.பி.மேத்யூ, கே.கே.ஜோஷ்வா மற்றும் எஸ்.விஜயன் ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இந்த மூவருக்கும் எதிராக நம்பி நாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தவறிழைத்த கேரள போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கிறோம் என தீர்ப்பில் தெரிவித்தது. இந்த நிலையில், டி.கே.ஜெயின் கமிட்டி அதன் விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சீலிட்ட உறையில் தாக்கல் செய்துள்ளது.

Next Story