கொரோனா பரவல் எதிரொலி: கேரளாவில் இறுதிக்கட்ட பெருந்திரள் பிரசாரத்துக்கு தேர்தல் கமிஷன் தடை


கொரோனா பரவல் எதிரொலி: கேரளாவில் இறுதிக்கட்ட பெருந்திரள் பிரசாரத்துக்கு தேர்தல் கமிஷன் தடை
x
தினத்தந்தி 4 April 2021 2:48 AM GMT (Updated: 4 April 2021 2:48 AM GMT)

கொரோனா பரவல் எதிரொலியாக கேரளாவில் இறுதிக்கட்ட பெருந்திரள் பிரசாரத்துக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

அதேநேரம் பா.ஜனதாவும் கேரளாவில் தங்கள் இருப்பை உறுதி செய்ய போராடி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் தேர்தல்களின்போது பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் கட்சிகள் பெருந்திரள் பிரசாரத்தில் ஈடுபடுகின்றன. இதில் தங்கள் பலத்தை காட்டுவதற்காக ஒவ்வொரு கட்சியும் அதிகமான மக்கள் தொகையை கூட்டி பிரசாரத்தில் ஈடுபடும். இந்த பிரசாரத்தை உள்ளூர் பேச்சுவழக்கில் ‘கோட்டிகலாஷம்’ என்று அழைக்கிறார்கள்.

அங்கு வருகிற 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த கோட்டிகலாஷம் நிகழ்ச்சியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்த கட்சிகள் முடிவு செய்திருந்தன.

ஆனால் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்குமாறு மாநில தேர்தல் அதிகாரி தீகா ராம் மீனா தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார். இதை ஏற்றுக்கொண்ட தலைமை தேர்தல் கமிஷன், கேரளாவில் கோட்டிகலாஷம் என்ற பெருந்திரள் பிரசாரத்துக்கு தடை விதித்து உள்ளது. அத்துடன் இருசக்கர வாகன பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளன.

Next Story