சத்தீஷ்கர்: மாவோயிஸ்டுகளுடன் என்கவுன்டரில் ஈடுபட்ட 15 வீரர்களை காணவில்லை எனத் தகவல்


சத்தீஷ்கர்: மாவோயிஸ்டுகளுடன் என்கவுன்டரில் ஈடுபட்ட 15 வீரர்களை காணவில்லை எனத் தகவல்
x
தினத்தந்தி 4 April 2021 3:30 AM GMT (Updated: 4 April 2021 3:30 AM GMT)

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுடன் என்கவுன்ட்டரில் ஈடுபட்ட 15 ராணுவ வீரர்களை காணவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன.

சுக்மா,

சிஆா்பிஎஃப் கமாண்டோ பிரிவு, மாவட்ட ஆயுத காவல்படை, சிறப்பு அதிரடிப் படை உள்ளிட்ட படைப் பிரிவுகளைச் சோ்ந்த வீரா்கள் கூட்டாக  சத்தீஷ்கர் மாநிலம் பிஜாபூா் மாவட்ட வனப் பகுதியில் மிகப் பெரிய அளவில் மாவோயிஸ்டு தடுப்பு நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டனா். 

சுக்மா - பிஜாபூா் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்துள்ளனா். 

இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரா்கள் 5 போ் உயிரிழந்தனா். 30 -பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த  வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், நேற்று என்கவுன்டரில் ஈடுபட்ட வீரர்களில் 15 பேரை காணவில்லை. இதனால், கூடுதல் படைகள் நிகழ்விடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று என்கவுன்டரில் உயிரிழந்த 5 வீரர்களில் 2 -பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சத்தீஷ்கர் காவல்துறை வட்டாரங்கள் கூறியதாக ஏ.என்.ஐ இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 

இதற்கிடையே,  வீரர்களின் உயிர்த்தியாகத்திற்கு தலை வணங்குவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அமித்ஷா கூறியிருப்பதாவது:  சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகளுடனான துப்பாக்கிச்சண்டையில் வீர மரணம் அடைந்த நமது துணிச்சலான வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். 

வீரர்களின் தியாகத்தை தேசம் ஒருநாளும் மறக்காது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.  அமைதி மற்றும் வளர்ச்சிக்கு எதிரியாக உள்ள இவர்களுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம்” என்றார். 

Next Story