மேற்குவங்கத்தில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க பாஜக முயல்கிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


மேற்குவங்கத்தில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க பாஜக முயல்கிறது  - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 April 2021 3:52 PM IST (Updated: 4 April 2021 6:16 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்க மாநிலத்தைக் கைப்பற்ற குஜராத்திகள் முயற்சித்து வருவதாக திரிணமுல் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ஹவ்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற திரிணமுல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து அழைத்து வரப்பட்ட குண்டர்கள் மூலம் மேற்குவங்கத்தை கைப்பற்ற குஜராத்திகள் முயல்கின்றனர்.

மேற்குவங்கத்தில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க பாஜக முயல்கிறது. குஜராத்தைப் போல வங்கத்தைக் கைப்பற்ற விட மாட்டோம்.

மோடி சிண்டிகேட் 1, அமித் ஷா சிண்டிகேட் 2,  இவர்கள் இருவரும் சேர்ந்து வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு போன்ற மத்திய அரசின் ஏஜென்சிகளை எதிர்க்கட்சியினர் மீது ஏவி விடுகின்றனர். அபிஷேக் பானர்ஜி வீட்டில் சோதனை நடத்தினர். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடத்தினர். இதுபோன்ற மிரட்டலால் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி விட முடியாது.

பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து ரவுடி கும்பலை அழைத்து வந்து குஜராத்தியர்கள் மேற்குவங்கத்தை கைபற்ற முயற்சி செய்கின்றனர். இவர்களால் மேற்குவங்கத்தில் மதக் கலவரமே நடக்கும். ஆனால் இதனை மேற்குவங்க மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

விவசாயிகளுக்கு பணம் கொடுக்க விடாமல் நான் தடுத்து விட்டதாக மத்திய அரசு குற்றம்சாட்டுகிறது. அவர்கள் கேட்ட விவசாயிகளின் பட்டியலை நான் அனுப்பி வைத்து விட்டேன். ஆனால் இதுவரை மேற்குவங்க விவசாயிகளுக்கு அவர்கள் பணம் வழங்கவில்லை. மேற்குவங்க விவசாயிகளை மத்திய அரசு வஞ்சித்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story