50 சதவீத எண்ணிக்கையுடன் கர்நாடகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி; மாநில அரசு உத்தரவு


50 சதவீத எண்ணிக்கையுடன் கர்நாடகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி; மாநில அரசு உத்தரவு
x
தினத்தந்தி 5 April 2021 3:20 AM IST (Updated: 5 April 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 50 சதவீத எண்ணிக்கையுடன் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் 50 சதவீத  எண்ணிக்கையுடன் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மூடுவதற்கு உத்தரவு

பெங்களூரு உள்பட மாநிலத்தில் 8 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பெங்களூரு உள்பட 8 மாவட்டங்களில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்தவும், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடங்களை மூடுவதற்கும் அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு கன்னட திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வருகிற 7-ந் தேதி வரை தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகள் பயன்படுத்த நேற்று முன்தினம் அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதுபோல், உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி பிரபல நடிகர் யஷ்சும் டுவிட்டரில் பதிவிட்டு ஆதரவு தெரிவித்திருந்தார்.

உடற்பயிற்சி கூடங்களை திறக்க...

இதையடுத்து, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க நேற்று கர்நாடக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் உடற்பயிற்சி கூடங்களை திறந்தாலும், 50 சதவீதம் பேர் மட்டுமே உடற்பயிற்சி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், ஒருவர் பயன்படுத்திய உபகரணங்களை மற்றொருவர் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஒருவர் பயன்படுத்தும் உபகரணங்களை உடனடியாக கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

கொரோனா தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள விதிமுறைகளை உடற்பயிற்சி கூடங்களில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், விதிமுறைகள் மீறப்படுவது தெரியவந்தால், உடற்பயிற்சி கூடங்களை மூடுவதற்கு உத்தரவிடப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு உடற்பயிற்சி கூடங்களின் கூட்டமைப்புகள் வரவேற்றுள்ளனர்.

Next Story