அரசுக்கு நாங்கள் ஒத்துழைக்கிறோம், ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு அரசு உதவ வேண்டும்; தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தல்


தேவேந்திர பட்னாவிஸ்
x
தேவேந்திர பட்னாவிஸ்
தினத்தந்தி 5 April 2021 5:04 AM IST (Updated: 5 April 2021 5:04 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை அமல்படுத்த ஒத்துழைப்போம், ஆனால் இதனால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு அரசு உதவவேண்டும் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பட்னாவிஸ் வலியுறுத்தி உள்ளார்.

ஊரடங்கு உத்தரவு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு விண்ணை முட்டும் அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக 40 ஆயிரத்தை கடந்துவந்த ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 50 ஆயிரத்தை நெருங்கியது. இது மராட்டிய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மராட்டிய அரசு நேற்று வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவு விதிக்க எதிர்க்கட்சியான பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை எதிர்த்து போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளது.இந்த நிலையில் மராட்டிய முன்னாள் மந்திரியும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நிதி உதவி

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அல்லது பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்தியிருப்பதை நாங்கள்( எதிர்க்கட்சிகள்) ஆதரிக்கிறோம். ஆனால் இந்த மோசமான காலத்தில் பாதிக்கப்படும் ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு நிதி உதவு வழங்குவதில் அரசு கவனம் செலுத்தவேண்டும். வேகமாக பரவும் புதியவகை கொரோனா வைரஸ் தொற்றானது நோயாளிகளின் நுரையீரலை வேகமாக பாதிப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். புதிய வகை கொரோனா வைரசை கட்டப்படுத்த மக்கள் எடுக்கவேண்டிய முன் எச்சரிக்கைகள் குறித்து அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மராட்டியம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கியது.

ஊரடங்கு உத்தரவுக்கு எங்களின்(எதிர்க்கட்சிகளின்) ஒத்துழைப்பை கோரி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அழைத்தால் நாங்கள் அதை ஒப்புக்கொள்வோம். ஆனால் மாநில அரசு இதைவைத்து அரசியல் விளையாட்டில் ஈடுபட கூடாது. தனது தோல்விக்கு மத்திய அரசை குற்றம் சாட்டக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story