சத்தீஷ்கர் என்கவுன்டர்: ஆந்திராவில் பாதுகாப்பு அதிகரிப்பு


சத்தீஷ்கர் என்கவுன்டர்: ஆந்திராவில் பாதுகாப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 April 2021 6:17 AM GMT (Updated: 5 April 2021 6:22 AM GMT)

மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அமராவதி,

சத்தீஷ்கார் மாநிலத்தில் தெற்கு பஸ்தார் வனப்பகுதி, நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி ஆகும். சுக்மா, பிஜாப்பூர், தண்டேவா ஆகிய 3 மாவட்டங்களில் இந்த வனப்பகுதி பரந்து விரிந்துள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம், பிஜாப்பூர், சுக்மா மாவட்ட வனப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிரான மாபெரும் தேடுதல் வேட்டையை தொடங்கினர். 

சி.ஆர்.பி.எப்., அதன் ‘கோப்ரா’ கமாண்டோ படை, மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றை சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் இதில் ஈடுபட்டனர். பிஜாப்பூர் மாவட்டத்தில் தரம், உசூர், பாமெட், சுக்மா மாவட்டத்தில் மின்பா, நர்சாபுரம் ஆகிய 5 இடங்களில் இருந்து தனித்தனி குழுக்களாக புறப்பட்டனர்.

இவற்றில், தரம் பகுதியில் இருந்து புறப்பட்ட குழுவினர், ஜோனாகுடா அருகே ஒரு குறிப்பிட்ட இடத்தை நெருங்கியபோது அங்கே மறைந்திருந்த நக்சலைட்டுகள், சரமாரியாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர். நக்சலைட்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

இதற்கிடையே, துப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்டுகள் தரப்பிலும் 12- 20 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, சத்தீஷ்கர் என்கவுன்டரை தொடர்ந்து ஆந்திராவிலும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எதிர்ப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story