பாதுகாப்பு படையினர் உடலுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா நேரில் அஞ்சலி
சுக்மா பகுதியில் நக்சலைட்டுகள் உடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.
ஜக்தல்பூர்
சத்தீஷ்கார் மாநிலத்தில் தெற்கு பஸ்தார் வனப்பகுதி, நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி ஆகும். சுக்மா, பிஜாப்பூர், தண்டேவா ஆகிய 3 மாவட்டங்களில் இந்த வனப்பகுதி பரந்து விரிந்துள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம், பிஜாப்பூர், சுக்மா மாவட்ட வனப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிரான மாபெரும் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
சி.ஆர்.பி.எப்., அதன் ‘கோப்ரா’ கமாண்டோ படை, மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றை சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் இதில் ஈடுபட்டனர். பிஜாப்பூர் மாவட்டத்தில் தரம், உசூர், பாமெட், சுக்மா மாவட்டத்தில் மின்பா, நர்சாபுரம் ஆகிய 5 இடங்களில் இருந்து தனித்தனி குழுக்களாக புறப்பட்டனர்.
இவற்றில், தரம் பகுதியில் இருந்து புறப்பட்ட குழுவினர், ஜோனாகுடா அருகே ஒரு குறிப்பிட்ட இடத்தை நெருங்கியபோது அங்கே மறைந்திருந்த நக்சலைட்டுகள், சரமாரியாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர். நக்சலைட்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, துப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்டுகள் தரப்பிலும் 12- 20 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை மாவோயிஸ்டுகள் டிராக்டரில் வந்து அடர்ந்த வனப்பகுதிக்கு எடுத்துச்சென்றனர்.
காலை 11.30 மணி வரை துப்பாக்கிச் சூடு நான்கு மணி நேரம் நீடித்ததாக நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவர் அசோக் ஜுஜா தெரிவித்தார். "மாவோயிஸ்டுகள் ராக்கெட் ஏவுகணைகள், கைக்குண்டுகள் மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தினர் என்று அவர் கூறினார்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து அசாமில் தனது தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மாவோயிஸ்டுகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என கூறினார். சத்தீஷ்கார் முதல்மந்திரி பூபேஷ் பாகேலுடன் பேசிய அவர், பாதுகாப்புப் படையினரின் தியாகம் வீணாகாது என்று கூறினார்.
இந்நிலையில், நக்சலைட்டுகள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல் நடந்த சுக்மா-பிஜாப்பூர் எல்லையின் ஜோனாகுடாவில் உள்ள காட்டுப்பகுதியை முதல் மந்திரியுடன் சேர்ந்து, உள்துறை மந்திரி அமித்ஷா இன்று நேரில் பார்வையிட்டார்.
சுக்மா பகுதியில் நக்சலைட்டுகள் உடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் உடலுக்கு பாதுகாப்புப் படையினருக்கு இறுதி மரியாதை செலுத்தினார். மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.மாநில தலைநகர் ராய்ப்பூரில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் நக்சலைட்டுகள் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோர் ஜக்தல்பூரில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
Related Tags :
Next Story