கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் மராட்டிய கவர்னர்...
மராட்டிய மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று செலுத்திக்கொண்டார்.
மும்பை,
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வந்தாலும் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், நாடு முழுவதும் கடந்த மாதம் (மார்ச்) 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதேபோல், கடந்த 1-ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், மராட்டிய மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று செலுத்திக்கொண்டார். மும்பையில் உள்ள ஜேஜே குரூப் தனியார் மருத்துவமனையில் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்திக்கொண்டார்.
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்கு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story