பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் ஏப்ரல் 7-ம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடல்


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் ஏப்ரல் 7-ம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடல்
x

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் ஏப்ரல் 7-ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் சந்தித்துப் பேசுகிறார்.

புதுடெல்லி,

பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 4-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள சுமார் 2.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 66 பேர் உட்பட நாடு முழுவதும் 2,000 மாணவர்கள் வெற்றி பெற்று, பிரதமருடன் பேசினர். முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு தேர்வு குறித்த அழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்கும் வகையில் மாணவர்களுடன் பிரதமர் மோடி ஏப்ரல் 7-ம் தேதி கலந்துரையாட உள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக இந்த ஆண்டு  காணொலி  வழியில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 

''பல்வேறு துறைகளில் ஏராளமான கேள்விகள் குறித்துப் புதிய முறையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் கலந்துரையாடல். பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியை ஏப்ரல் 7-ம் தேதி மாலை 7 மணிக்குக் காணலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

Next Story