3வது கட்ட தேர்தல்: மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பா.ஜ.க. உறுப்பினர்கள்


3வது கட்ட தேர்தல்:  மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பா.ஜ.க. உறுப்பினர்கள்
x
தினத்தந்தி 5 April 2021 8:17 PM GMT (Updated: 5 April 2021 8:17 PM GMT)

மேற்கு வங்காளத்தில் 3வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பா.ஜ.க. உறுப்பினர்கள் பலர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளனர்.

கொல்கத்தா,

294 இடங்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மார்ச் 27ந்தேதி தொடங்கி இந்த மாதம் 29ந்தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.  மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  கடந்த 1ந்தேதி 2வது கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து 3வது கட்ட தேர்தல் இன்று (6ந்தேதி) நடைபெற உள்ளது.  இதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. உறுப்பினர்கள் பலர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளனர்.  அவர்களில், பிரியான்சு பாண்டே, ரபி சிங், சுரோஜித் பிஸ்வாஸ் மற்றும் ஆகாஷ் மல்லா ஆகியோர் மாநில மந்திரி புர்னேந்து பாசு மற்றும் எம்.பி. தோலா சென் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசில் தங்களை இணைத்து கொண்டனர்.

இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாசு, மம்தா பானர்ஜியின் பணியை மாநிலத்தில் உணர்ந்த இந்த உறுப்பினர்கள் இனி திரிணாமுல் காங்கிரஸ் கொடியை ஏந்துவார்கள்.  எங்களுடைய கட்சிக்கு அவர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெருங்கடல் போன்றது.  பல்வேறு நபர்களும் எங்களுடைய கட்சியில் இணைந்து வருகின்றனர்.  மேற்கு வங்காளத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு அமையும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார்.

Next Story