கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வு நடத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு - மந்திரி சுரேஷ்குமார்


கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வு நடத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு - மந்திரி சுரேஷ்குமார்
x
தினத்தந்தி 6 April 2021 3:06 AM IST (Updated: 6 April 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வு நடத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

பெங்களூரு:

  கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மாணவர்களுக்கு தேர்வு

  கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளை வருகிற 20-ந் தேதி வரை மூடியுள்ளோம். இந்த மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டுமா? என்பது தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம், கல்வித்துறை நிபுணர்கள் மற்றும் பெற்றோர் தப்பினருடன் இன்று (நேற்று) பெங்களூருவில் கலந்து ஆலோசனை நடத்தினேன். இதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், ஏதாவது ஒரு ரீதியில் தேர்வை நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளனர்.

  10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.கல்லூரி வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து ஏற்கனவே கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்வு நடத்தாவிட்டால் குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த மாணவர்களுக்கு தேர்வு நடத்தவில்லை. இந்த ஆண்டும் தேர்வு நடத்தாவிட்டால் அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும் என்று தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கூறுகிறார்கள். அதனால் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
  இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

மாணவர்கள் தேர்ச்சி

  முன்னதாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகள், எக்காரணம் கொண்டும் தேர்வு நடத்தாமல் மாணவர்களை தேர்ச்சி செய்ய முடிவு எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். அதே நேரத்தில் நேரில் ஆஜராகி தேர்வு எழுத மாணவர்களை பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள் என்று பெற்றோர் தரப்பினர் கூறினர்.

 மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

Next Story