சசிகலா அ.தி.மு.க. பக்கம் உள்ளார்- தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் தகவல்
தமிழகத்தில் பா.ஜனதா வெற்றி பெறுவது கடிமானது இல்லை என்றும், சசிகலா அ.தி.மு.க. பக்கம் உள்ளார் என்றும் தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
குடும்ப அரசியல்
தமிழக சட்டசபை தேர்தல் நாளை (இன்று) நடக்கிறது. நான் அங்கு அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவிட்டு வந்துள்ளேன். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் குடும்ப அரசியல் மற்றும் அந்த கட்சிகளின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறியுள்ளோம். அங்கு பா.ஜனதாவின் வெற்றிக்கு நாங்கள் தீவிரமாக பாடுபட்டுள்ளோம்.
அதனால் தமிழகத்தில் பா.ஜனதா வெற்றி பெறுவது என்பது கடினமான ஒன்று கிடையாது. சசிகலா அ.தி.மு.க. பக்கம் உள்ளார். தேர்தல் களத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டி நிலவுகிறது. தமிழ் கடவுள் முருகனை தி.மு.க.வினர் அவமதித்தனர். அதற்கு எதிராக நாங்கள் வெற்றிவேல் யாத்திரையை மேற்கொண்டோம். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிரதமர் மோடி
அங்கு ஜல்லிக்கட்டு ஒரு கலாசார நிகழ்ச்சி ஆகும். அதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பிரதமர் மோடி விலக்கினார். தெலுங்கானா மற்றும் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்தோம். பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் பலர் தமிழகம் வந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
அதனால் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகத்தை பொறுத்தவரையில் எடியூரப்பா தான் எங்களின் தலைவர். ஆனால் தொண்டர்கள் என்று வரும்போது அவர்கள் தான் உரிமையாளர்கள். எங்கள் கட்சியில் குடும்ப அரசியல் இல்லை.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.
Related Tags :
Next Story