ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மினி ஊரடங்கு தேவை: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் பேட்டி
ஹாட்ஸ்பாட் பகுதிகளை அடையாளம் கண்டு மினி ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் பேட்டியில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா அதிகம் பாதித்த ஹாட்ஸ்பாட் பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட முக்கிய திட்டங்களை செயல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் கடந்த ஆண்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதுடன், ஒரேநாளில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இது எதிர்க்கட்சிகளுக்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான ஆயுதமாக ஆகிவிட்டது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் உச்சம் அடைந்து வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 1 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரியில் கேரளாவில் பெருந்தொற்று அறியப்பட்ட பின்னர் ஒருநாள் அதிகபட்ச கொரோனா பாதிப்பு இதுவாகும்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 67 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து மராட்டியம், சத்தீஷ்கார் மற்றும் பஞ்சாப்பிற்கு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 50 உயர்மட்ட பொது சுகாதார குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது.
இந்த சூழலில், ஊரடங்க தேவையா? என்பதற்கு பதிலளித்த குலேரியா, அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை கொண்ட மண்டல பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட முக்கிய திட்டங்களை செயல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. இதனை நான் ஒப்பு கொள்கிறேன். ஆனால் தேசிய அளவில் இதனை செயல்படுத்த அவசியமில்லை.
ஹாட்ஸ்பாட் பகுதிகளை அடையாளம் காண வேண்டிய தேவை உள்ளது. அதன்பின், கட்டுப்பாட்டு மண்டலங்கள் கொண்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கலாம் என கூறியுள்ளார்.
அரசின் கொரோனா தடுப்பு படையின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக உள்ள குலேரியா, முழு ஊரடங்கு உத்தரவை நாம் பிறப்பிக்க முடியவில்லை எனில், கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்க வேண்டும்.
அவை மினி ஊரடங்கு போல் இருக்க வேண்டும். அதனால், மக்கள் வெளியே செல்ல முடியாது. அந்த பகுதிகளில் அதிக அளவில் பரிசோதனைகள், கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவை நடைபெறும். நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் கட்டாய பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story