வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் அரசு போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி பேட்டி
அரசு போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளோம் என்றும், அதனால் அவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறினார். துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கலபுரகி,
போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு வழங்க கோரி நாளை (அதாவது இன்று) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். மாநிலத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இந்த நேரத்தில் அதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாது. அதுகுறித்து வாக்குறுதியும் வழங்க முடியாது. ஆனால் போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
ஆனால் சம்பள உயர்வு எவ்வளவு என்பதை இப்போதே எங்களால் கூற முடியாது. முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி அரசின் நிதி நிலையை கவனத்தில் வைத்து முடிவு எடுக்க வேண்டும். அதனால் ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கக்கூடாது.
எடியூரப்பா இன்று (நேற்று) போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஊழியர்களின் 9 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம். கடைசி கோரிக்கையான சம்பள உயர்வை அறிவிக்க தேர்தல் நடத்தை விதிகள் தடையாக உள்ளன. இதை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்த பிரச்சினைகளாக இருந்தாலும் அதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துவது பிரச்சினைக்கு தீர்வை தராது.
ஊழியர்களின் நலனை அரசு பாதுகாக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். கொரோனா பரவல் ஏற்பட்டு வரும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் போராட்டம் நடத்துவது என்பது யாருக்கும் நல்லதல்ல. கொரோனா வேகமாக பரவுவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய நேரத்தில் போராட்டம் நடத்துவது சரியா?. எடியூரப்பா ஏற்கனவே போக்குவரத்து அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தற்போது மாநில அரசின் நிதி நிலை சரி இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பிடிவாதம் பிடிப்பதால் எந்த பிரச்சினையும் தீராது. வருகிற மே மாதம் 4-ந் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்பதால் நாங்கள் எந்த கோரிக்கையையும் நிறைவேற்ற முடியாது. தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கினால் சம்பள உயர்வு குறித்து முடிவு எடுக்க முடியும்.
போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்கவே முடியவில்லை. அரசின் நிதி நிலையில் இருந்து தான் சம்பளம் வழங்குகிறோம். போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் ஊழியர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இவ்வளவு நெருக்கடியான நிலையிலும் அரசுக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம் நடத்துவது நியாயம்தானா?.
ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். பிடிவாதமாக இருக்கக்கூடாது. கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பொதுமக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.
Related Tags :
Next Story