வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போக்குவரத்து ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் - கா்நாடக அரசு எச்சரிக்கை
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்து ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்று கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூரு:
ஆலோசனை கூட்டம்
அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் பஸ் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
இதில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, தலைமை செயலாளர் ரவிக்குமார், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், பி.எம்.டி.சி. தலைவர் நந்தீஸ்ரெட்டி மற்றும் போக்குவரத்து துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு தலைமை செயலாளர் ரவிக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சம்பள உயர்வு
தற்போது உள்ள கொரோனா நெருக்கடி சூழ்நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு எக்காரணம் கொண்டும் 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க முடியாது. அதனால் போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் வேலை நிறுத்த போராட்ட முடிவை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பணிக்கு ஆஜராகாத ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.
போக்குவரத்து ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாது. பேச்சுவார்த்தை என்பது முடிந்துபோன அத்தியாயம். பொதுமக்களுக்கு தொந்தரவு செய்தாலோ அல்லது அரசு வாகனங்களை கல்வீசி தாக்கினாலோ அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து ஊழியர்களுக்கு 8 சதவீத சம்பள உயர்வு வழங்க முடிவு செய்துள்ளோம். இதை அமல்படுத்த தேர்தல் ஆணையத்தின் அனுமதியை கேட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கினால் சம்பள உயர்வு முடிவு செயல்படுத்தப்படும்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசு எந்த வாக்குறுதியையும் கொடுக்க முடியாது. இதை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஆனாலும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு முன்பு அரசு பஸ்களில் தினமும் 60 லட்சம் பேர் பயணம் செய்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 30 லட்சமாக குறைந்துவிட்டது. இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு தினசரி ரூ.4 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு வருகிற ஜூன் மாதம் வரை சம்பளம் வழங்குவதற்கான தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் நலனை காக்க அரசு தயாராக உள்ளது. ஆனால் ஊழியர்கள் அடிக்கடி போராட்டம் நடத்துவது சரியா?. இந்த முறை நாங்கள் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். பணிக்கு ஆஜராகாதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
கொரோனா 2-வது அலை
தற்போது கொரோனா 2-வது அலை விசி வருகிறது. இந்த நேரத்தல் யாரும் கும்பலாக ஒரு இடத்தில் சேரக்கூடாது என்று வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய நேரத்தில் போராட்டம் நடத்துவது சரியல்ல. போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியராக கருத முடியாது. 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள வழங்க வழங்குவது என்பது சாத்தியமே இல்லை.
இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story