பெருந்தொற்றை எதிர்த்து போரிட கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்
பெருந்தொற்றை எதிர்த்து போரிடுவதற்கு கொரோனா கால விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி,
உலகளாவிய சுகாதார விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ந் தேதியன்று உலக சுகாதார தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1.15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், உலக சுகாதார தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-
உலக சுகாதார தினம் என்பது நமது கிரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு இரவும், பகலும் உழைக்கிற அனைவருக்கும் நமது நன்றியையும், பாராட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு நாள் ஆகும். சுகாதாரத்துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதற்கான நமது உறுதியை மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரு நாளும் ஆகும்.
உலக சுகாதார தினத்தில், முக கவசம் அணிதல், ஒழுங்காக கைகளை சுத்தம் செய்தல், பிற விதிமுறைகளை பின்பற்றுதல் உள்ளிட்ட சாத்தியமாகக்கூடிய அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து கொரோனாவை எதிர்த்து போரிடுவதில் நாம் கவனம் செலுத்துவோம். அதே நேரத்தில், நோய் எதிர்ப்புச்சக்தியை பெருக்குவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். நம்மை உடல்தகுதியுடன் வைத்துக்கொள்வோம்.
மக்கள் தரமான, மலிவு கட்டண சுகாதார வசதிகளை பெறுவதை உறுதி செய்யும் வகையில் ஆயுஷ்மான் பாரத், பிரதம மந்திரி ஜன ஆசாதி யோஜனா உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது.
கொரோனா வைரசுக்கு எதிரான போரினை வலுப்படுத்தும் விதத்தில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.
Related Tags :
Next Story