பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்தை மாற்ற முடிவு?


கமல்பந்த்
x
கமல்பந்த்
தினத்தந்தி 7 April 2021 8:46 PM GMT (Updated: 7 April 2021 8:46 PM GMT)

பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்தை மாற்ற அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து, புதிய போலீஸ் கமிஷனராக 4 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:


கமல்பந்தை மாற்ற முடிவு

  பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக இருந்து வருபவர் கமல்பந்த். கடந்த ஆண்டு (2020) ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி அவர் பெங்களுரு மாநகர போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றிருந்தார். இந்த நிலையில், போலீஸ் கமிஷனர் கமல்பந்தை மாற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது போலீஸ் கமிஷனர் கமல்பந்த் இந்த மாத இறுதிக்குள் மாற்றப்பட இருப்பதாகவும், அவருக்கு பதில் புதிய போலீஸ் கமிஷனரை நியமிக்க அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

  கர்நாடக மாநில சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி.யாக பி.கே.கர்கே இருந்து வருகிறார். இந்த மாத இறுதியில் அவர் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வரும் போலீஸ் கமிஷனர் கமல்பந்திற்கு பதவி உயர்வு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதாவது கூடுதல் டி.ஜி.பி.யான அவர், டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற இருக்கிறார். அத்துடன் பி.கே.கர்கே ஓய்வு பெற்றதுடன், கர்நாடக மாநில சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி.யாக கமல்பந்த் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

4 அதிகாரிகள் இடையே போட்டி

  இதனால் பதவி உயர்வுக்காக கமல்பந்த் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், அவர் மீது எந்த விதமான குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் கூறப்படுகிறது. போலீஸ் கமிஷனர் கமல்பந்திற்கு பதவி உயர்வு அளித்து மாற்றப்பட இருப்பதால், புதிய போலீஸ் கமிஷனர் பதவிக்கு 4 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

  அதாவது மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான தயானந்த், பிரதாப் ரெட்டி, ராமசந்திர ராவ், அம்ருத்பால் ஆகிய 4 பேர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக தற்போது பதவி வகித்து வரும் 4 பேரில் ஒருவர் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Next Story