பெங்களூருவில் மின்சாரம் தாக்கி 4 தொழிலாளா்கள் சாவு


பெங்களூருவில் மின்சாரம் தாக்கி 4 தொழிலாளா்கள் சாவு
x
தினத்தந்தி 7 April 2021 8:58 PM GMT (Updated: 7 April 2021 8:58 PM GMT)

பெங்களூரு அருகே ஆனேக்கல்லில் மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் உயிர் இழந்தார்கள். பந்தல் போடும் போது இந்த பரிதாபம் நடந்துள்ளது.

பெங்களூரு:

பந்தல் போடும் பணி

  பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திபெலே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இன்ட்டபெலே கிராமத்தில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தனியார் கட்டுமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருந்தது. இதற்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்படும் இடத்தில் சாமியானா பந்தல் போட கட்டுமான நிறுவனம் முடிவு செய்தது.

  இதற்கான பந்தல் போடும் பணிகள் நேற்று மதியம் நடைபெற்றது. பந்தல் போடும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தார்கள். பந்தல் போடுவதற்காக இரும்பு கம்பியை தொழிலாளர்கள் 4 பேரும் தூக்கி சென்றார்கள். அப்போது அந்த வழியாக சென்ற உயர்மின் அழுத்த வயரில் இரும்பு கம்பி உரசியதாக தெரிகிறது. இதனால் இரும்பு கம்பி மூலமாக மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்களை மின்சாரம் தாக்கியது. இதன் காரணமாக 4 பேரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்கள்.

4 தொழிலாளா்கள் சாவு

  மேலும் சம்பவ இடத்திலேயே 4 தொழிலாளர்களும் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். இதுபற்றி உடனடியாக அத்திபெலே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 4 தொழிலாளர்களின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். தகவல் அறிந்ததும் பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவி டி.சென்னன்னவர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி கணேஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

  அப்போது அந்த தொழிலாளர்கள், பரப்பனஅக்ரஹாரா அருகே ஒசரோட்டில் பந்தல் போடும் தொழில் செய்பவரிடம் தொழிலாளர்களாக வேலை செய்தது தெரியவந்தது. பலியானவர்கள் ஆகாஷ் (வயது 30), மகாதேவ் (35), விஷகண்டா (33), விஜய் என்ற விஜய்சிங் (30) ஆகிேயார் என்று தெரியவந்து உள்ளது.

ஆனேக்கல்லில் சோகம்

  மேலும் சாமியானா பந்தல் போடும் பகுதியில் உயர்மின் அழுத்த வயர்கள் செல்வது பற்றி கட்டிட உரிமையாளர் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு தெரிந்திருந்தும், அதுபற்றி தொழிலாளர்களுக்கு சரியான தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் தொழிலாளர்களும் உயர்மின் அழுத்த வயர்கள் செல்வதை கவனிக்காமல் இரும்பு கம்பியை தூக்கி சென்றதால், மின்சாரம் தாக்கி 4 பேர் பலியாக நேரிட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  இதுகுறித்து அத்திபெலே போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி 4 தொழிலாளா்கள் பலியான சம்பவம் ஆனேக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story