ஊழியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி; கர்நாடகத்தில் அரசு பஸ் சேவை முடங்கியது- தனியார் பஸ்களை இயக்க அனுமதி
கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு பஸ்கள் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். இதைதொடர்ந்து தனியார் பஸ்கள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பெங்களூரு:
வேலை நிறுத்தம்
கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசு, அரசு ஊழியராக்க வேண்டும் என்ற கோரிக்கையை தவிர்த்து பிற 9 கோரிக்கைகளை 3 மாதத்தில் நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்தது. இதையடுத்து ஊழியர்கள் தங்களின் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
ஆனால் போக்குவரத்து துறை அளித்த வாக்குறுதிப்படி 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை இன்னும் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் இந்த சம்பள உயர்வு உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் மாதம் 7-ந் தேதி (அதாவது நேற்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்தனர்.
தனியார் பஸ்கள்
அந்த அறிவிப்பின்படி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் தங்களின் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதையொட்டி பெங்களூரு, மைசூரு, சிக்கமகளூரு, மண்டியா, ஹாவேரி, கதக், பெலகாவி, கலபுரகி, தட்சிணகன்னடா, உடுப்பி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு ஆஜராகவில்லை. இதனால் அரசு பஸ்களின் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் தனியார் பஸ்கள், பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு நகருக்குள்ளும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் பெங்களூருவில் இருந்து புறநகர்களுக்கும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் அதில் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அங்கு கிடைக்கும் தனியார் பஸ்களை பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது.
கூடுதலாக வசூல்
அரசு பஸ்களை போல் அனைத்து பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து இயக்கப்படவில்லை. அதே நேரத்தில் முக்கியமான பகுதிகளுக்கு மட்டும் தனியார் பஸ்கள் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் தனியார் பஸ்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாக பயணிகள் சிலர் புகார் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அத்தகையை பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தலைநகர் பெங்களூருவில் உள்ள மெஜஸ்டிக் பஸ் நிலையம் அரசு பஸ்களின் வருகை இன்றி காணப்பட்டது. அதே நேரத்தில் தனியார் பஸ்களும் குறைந்த எண்ணிக்கையில் வந்து சென்றன. பொதுமக்கள் தங்களின் பகுதிக்கு செல்ல பஸ் இல்லாத காரணத்தால் ஆட்டோ, வாடகை கார்களில் அதிக பணம் கொடுத்து சென்றனர். மருத்துவமனைகளுக்கு செல்வோர், பஸ்கள் இன்றி தவிப்புக்கு ஆளாயினர். பெங்களூருவில் மட்டும் சுமார் 3,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கர்நாடகம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் அரசு பஸ்கள் போக்குவரத்து சேவையை வழங்குகின்றன. இவற்றை நம்பி பயணம் செய்யும் பொதுமக்கள் இந்த வேலை நிறுத்த போராடடத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மெட்ரோ ரெயில்
பெங்களூருவில் அரசு பஸ்களின் போக்குவரத்து முடங்கியுள்ளதால், மெட்ரோ ரெயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டு உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படுகிறது. மெட்ரோ ரெயில்களில் பயணிகள் அதிக எண்ணிக்யைில் நேற்று பயணித்தனர். பெங்களூருவை பொறுத்தவரையில் சாலைகளில் பி.எம்.டி.சி. பஸ்கள் நிரம்பி வழியும். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆனால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பஸ்கள் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் சாலைகளில் வாகன நெரிசல் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் பஸ்களை பயன்படுத்துபவர்கள் தற்போது சொந்த வாகனங்களில் அலுவலகம் மற்றும் பணிகளுக்கு செல்வதால், சாலைகளின் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்க முடியாது என்று அரசு சொல்கிறது. ஆனால் ஊழியர்கள், தங்களுக்கு 6-வது ஊதியகுழுப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அரசு மற்றும் ஊழியர்கள் இருதரப்பும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அதனால் இந்த பிரச்சினை அவ்வளவு சீக்கிரமாக முடிவடையாது என்று கூறப்படுகிறது.
வாபஸ் பெற மாட்டோம்
இந்த வேலை நிறுத்தம் குறித்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்க நிர்வாகி ஆனந்த் கூறியதாவது:-
நாங்கள் கடந்த முறை 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். அப்போது அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 9 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தது. கோரிக்கைகளை 3 மாதத்தில் நிறைவேற்றுவதாக கூறியது.
ஆனால் 3 மாதங்கள் ஆகியும் எங்களின் முக்கியமான சம்பள உயர்வு கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இப்போது அரசு, 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்க முடியாது என்று சொல்கிறது. 8 சதவீத சம்பள உயர்வு மட்டுமே வழங்க முடியும் என்று அரசு சொல்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு அளித்த வாக்குறுதியை தான் நிறைவேற்றுமாறு நாங்கள் கேட்கிறோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நாங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற மாட்டோம்.
இவ்வாறு ஆனந்த் கூறினார்.
தேர்தல் ஆணையம்...
கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறுகையில், "போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதனால் இந்த சம்பள உயர்வு வழங்க தேர்தல் ஆணையத்தின் அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளோம்.
தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும், ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும். அதனால் ஊழியர்களின் தங்களின் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்" என்றார்.
ரூ.17 கோடி இழப்பு
கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று தொடங்கிய இந்த போராட்டத்தால் அரசு பஸ்களின் போக்குவரத்து முடங்கியது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் அரசு பஸ் ஓடாததால் போக்குவரத்து கழகங்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story