ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜராவதில் இருந்து விலக்கு - சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவு


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜராவதில் இருந்து விலக்கு - சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 April 2021 9:40 PM GMT (Updated: 7 April 2021 9:40 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நேற்று விலக்கு அளித்தது.

புதுடெல்லி, 

கடந்த 2007-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியை பெற, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில், ஐ.என்.எக்.ஸ். மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சி.பி.ஐ. கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதைத்தொடர்ந்து, கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதில் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான இ-குற்றப்பத்திரிகை கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட்டு வழக்கமாக செயல்பட தொடங்கும போது, இ-குற்றப்பத்திரிகையின் நகலை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி கே.கே. நாக்பால் முன், மத்திய அரசு வக்கீல் அமித் மகாஜன், அமலாக்கத் துறை சார்பில் அரசு சிறப்பு வக்கீல் என்.கே. மத்தா ஆகியோர் கடந்த மார்ச் 14-ந் தேதி ஆஜராகி, ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு கடந்து வந்த பாதையும், குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதையும் வாதங்களில் எடுத்துரைத்தனர்.

வாதங்களை பதிவு செய்து கொணட நீதிபதி எம்.கே. நாக்பால், ‘ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொண்டு 10 பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை மீது விசாரணையை தொடர்ந்து நடத்த அனைத்து முகாந்திரங்களும் உள்ளன. எனவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், எஸ். பாஸ்கரராமன், பீட்டர் முகர்ஜியா உள்ளிட்டோரும், நிறுவனங்கள் சார்பில் பிரதிநிதிகளும் ஏப்ரல் 7-ந்தேதி (அதாவது நேற்று) நடைபெறும் விசாரணையில் ஆஜராக வேண்டும்’ என உத்தரவிட்டார்.

இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.கே. நாக்பால் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சார்பில் வக்கீல்கள் அர்ஷ்தீப் சிங், பிரதீக் சத்தா ஆஜராகி, ‘தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று (நேற்று முன்தினம்) நடந்து முடிந்தது. எம்.பி.க்கள் என்பதால் இருவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். எனவே இருவரும் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என வாதிட்டனர். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையிலிருந்து ஆஜராக இருவருக்கும் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து வழக்கை வருகிற 16-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Next Story