ஏ.சி., எல்.இ.டி. விளக்கு உற்பத்திக்கு ரூ.6,238 கோடி ஊக்கத்தொகை - மத்திய மந்திரிசபை ஒப்புதல்


ஏ.சி., எல்.இ.டி. விளக்கு உற்பத்திக்கு ரூ.6,238 கோடி ஊக்கத்தொகை - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
x
தினத்தந்தி 8 April 2021 3:15 AM IST (Updated: 8 April 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

ஏ.சி., எல்.இ.டி. விளக்கு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 238 கோடி உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி, 

13 முக்கிய தொழில்துறைகளில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தப்போவதாக நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ரூ.1 லட்சத்து 97 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே 6 தொழில்துறைகளில் ஊக்கத்தொகை அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது.

இந்தநிலையில், ஏ.சி., எல்.இ.டி. விளக்கு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்க நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டம், இதற்கான ஒப்புதலை அளித்தது. இதற்காக ரூ.6 ஆயிரத்து 238 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது:-

ஏ.சி. எல்.இ.டி. விளக்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை ஊக்கத்தொகை அளிக்கப்படும். தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படாத உதிரிபாகங்களை இந்தியாவில் தயாரிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நிறுவனங்களை தேர்ந்தெடுப்போம்.

இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம், முட்டுக்கட்டைகளை அகற்றி, உள்நாட்டு உற்பத்தியை உலகத்துடன் போட்டி போடும்வகையில் உருவாக்குவது ஆகும். இத்திட்டத்தால், இந்தியாவில் உற்பத்தி அதிகரிக்கும்.

மேலும், இத்திட்டம் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதுடன், ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும். ஏ.சி., எல்.இ.டி. விளக்கு உற்பத்தி தொழிலின் வளர்ச்சி விகிதம் உயரும்.

இந்த திட்டத்தால், அடுத்த 5 ஆண்டுகளில், ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடி மதிப்புள்ள உற்பத்தி உருவாகும் என்றும், கூடுதலாக 4 லட்சம் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story